சீனாவிடம் ஹாங்காங் ஒப்படைக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு
ஹாங்காங்: பிரிட்டனின் காலனியாக இருந்த ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவுபெறுகிறது. அந்தக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள சீன அதிபர் ஸி ஜின்பிங் நேற்று ஹாங்காங் வந்து சேர்ந்தார்.
நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அதிபர் ஸியின் வருகை, 2020ல் சீனாவில் கொரோனா தொற்று நெருக்கடி காரணமாக அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக சீனாவுக்கு வெளியில் வருகை புரிந்திருப்பது இதுவே முதல்முறை. 2017 பயணத்திற்குப் பிறகு, ஹாங்காங்கின் ஆண்டு விழா நிகழ்வுகளுக்குத் தலைமை தாங்குவது இது இரண்டாவது முறையாகும்.
சீனாவில் இருந்து அதிவேக ரயில் மூலம் தன் மனைவி பெங் லிவானுடனும் நாட்டின் முக்கிய அதிகாரிகளுடனும் ஹாங்காங்குக்கு வருகைபுரிந்துள்ளார் அதிபர் ஸி. ஹாங்காங்கின் வெஸ்ட் கவ்லூன் ரயில் நிலையத்திற்கு வந்துசேர்ந்த அவரை, ஹாங்காங்கில் தலைமை நிர்வாகி பதவியில் இருந்து வெளியேறவிருக்கும் திருமதி கேரி லாம் வரவேற்றார். அத்துடன் சீனப் பாரம்பரிய சிங்க நடனத்துடன் பள்ளிக்குழந்தைகளும் கொடி அசைத்து அதிபர் ஸியை வரவேற்றனர்.
"எனது இதயம் ஹாங்காங் பற்றிய எண்ணத்தில்தான் உள்ளது. ஹாங்காங் பல இன்னல்களையும் சவால்களையும் சந்தித்து, தீயில் கருகிய சாம்பலைப்போல் எழுச்சி பெற்றுள்ளது," என்றார்.
அதிபர் ஸியின் வருகையையொட்டி ஹாங்காங்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக நகரின் பல பகுதிகள் மூடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏராளமான காவல்துறை அதிகாரிகள் பாதுகாவல் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
அதிபர் ஸி, இன்று நடைபெறும் 25 ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொள்வதோடு ஹாங்காங்கின் புதிய தலைமை நிர்வாகியாக திரு ஜான் லீயின் பதவியேற்பு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்வார் என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது.
நேற்று தைப்போ அறிவியல் பூங்காவுக்கு வருகை மேற்கொள்வதற்கு முன் வான் சாய் என்னுமிடத்தில் உள்ள கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்திற்குச் சென்று அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹாங்காங் குறித்த கண்காட்சியைப் பார்வையிட்டார். அக்கண்காட்சியில் பெய்ஜிங்குக்கு ஆதரவான அரசியல்வாதிகள், செல்வந்தர்கள் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.
நேற்று இரவு ஹாங்காங் தலைவர் கேரி லாம் செங்கின் அதிகாரபூர்வ இல்லத்தில் நடைபெறும் விருந்தில் கலந்துகொண்டார்.
இந்நிலையில் ஹாங்காங்கில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து தினசரி தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 2,000 புதிய தொற்று பதிவாகியுள்ளது.

