தோக்கியோ: மறைந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கு நேற்று நடைபெற்றது. திரு அபே, ஆக அதிக காலம் ஜப்பானின் பிரதமராகப் பதவி வகித்தவர்.
தலைநகர் தோக்கியோவில் அவரின் நல்லுடல் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. அதைக் காண நடைபாதைகளில் மக்கள் திரண்டனர்.
காவல்துறையின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கூட்டம் கூடியது. சிலர் நேற்று காலையிலிருந்தே நீண்ட வரிசையில் நின்று காத்திருந்தனர்.
மக்களில் பலர் கத்தியபடி கைத்தட்டி மரியாதை செலுத்தினர். சிலர் கைகளில் மலர்களை வைத்திருந்தனர்.
"எங்கள் நாட்டிற்கு நீங்கள் ஆற்றிய பங்கிற்கு மிகவும் நன்றி,'" என்று ஓர் ஆடவர் தொடர்ந்து உரக்கக் கத்தினார். வானில் பல ஹெலிகாப்டர்களும் நிகழ்வில் ஈடுபட்டன.
சென்ற வாரம் தாம் பங்கேற்ற தேர்தல் பிரசாரத்தில் 67 வயதான திரு அபே சுட்டுக் கொல்லப்பட்டார்.
சுமார் 2,500 பேர் நேற்று அவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டனர். ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, எதிர்கட்சித் தலைவர் கென்டா இஸுமி உள்ளிட்டோர் அவர்களில் அடங்குவர்.
ஜப்பானின் அரசர் நருஹிட்டோ, அரசியார் மசாக்கோ ஆகியோரும் மலர்களையும் ஊதுபத்திகளைக் கொளுத்துவதற்கான கூடத்தையும் வழங்கினர்.
உலக நாடுகளிலிருந்து கிட்டத்தட்ட 2,000 அனுதாபக் குறிப்புகள் அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் உள்ளிட்ட தலைவர்கள் திரு அபேக்கு மரியாதை செலுத்த ஜப்பான் சென்றனர்.

