பேங்காக்: தாய்லாந்தின் உற்பத்தி, சேவைத் துறைகளில் சுமார் 500,000 வெளிநாட்டு ஊழியர்கள் தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலிலிருந்து தாய்லாந்து மீண்டுவருவதைத் தொடர்ந்து அந்நாட்டில் ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
தாய்லாந்தில் கிட்டத்தட்ட அனைத்து கிருமிப் பரவல் கட்டுப்பாடுகளும் அகற்றப்பட்டுள்ளன. பயணக் கட்டுப்பாடுகளும் அவற்றில் அடங்கும்.
மியன்மாரில் தொடர்ந்துவரும் உள்நாட்டுப் போர், சில அண்டை நாடுகள் கிருமிப் பரவல் அலையை எதிர்நோக்குவது போன்ற காரணங்களால் எதிர்பார்த்ததைவிட குறைவான வெளிநாட்டு ஊழியர்கள் தாய்லாந்துக்குச் சென்றுள்ளனர். இப்படிப்பட்ட சூழலில் அங்கு ஊழியர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.
குறிப்பாக சுற்றுப்பயணத்தை சார்ந்திருக்கும் துறைகள், கட்டுமான, மீன் பண்ணைத் துறைகள் போன்றவற்றுக்கு இது பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைவான சம்பளம், சவாலான வேலைச் சூழல் உள்ளிட்ட காரணங்களால் இத்தகைய துறைகளில் பலர் வேலை செய்ய விரும்புவதில்லை.
"தாய்லாந்தின் பொருளியலை இயங்கச் செய்ய வெளிநாட்டு ஊழியர்கள் அவசியம். அதனால் இது பெரிய பிரச்சினையாக இருக்கிறது," என்று தாய்லாந்து வர்த்தகச் சபையின் துணைத் தலைவரான திரு பொஜ் அராம்வட்டானானொன்ட் கூறினார்.
"பெரிய அளவிலான உள்கட்டமைப்புத் திட்டங்கள் இருப்பதால் இனி எங்களுக்குக் கூடுதலான வெளிநாட்டு ஊழியர்கள் தேவைப்படுவர். சேவைத் துறையிலும் பல வேலைகள் காலியாக இருக்கின்றன," என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொள்ளைநோய்ப் பரவல் தொடங்கியதிலிருந்து 300,000க்கும் அதிகமான வெளிநாட்டு ஊழியர்கள் தாய்லாந்தைவிட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது. அவர்களில் சுமார் 200,000 பேர் மட்டுமே இவ்வாண்டு நாடு திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்துக்கும் இதர சில ஆசியான் நாடுகளுக்கும் இடையே உள்ள இருதரப்பு ஒப்பந்தங்களால் அது சாத்தியமானது.
தாய்லாந்தில் தற்போது கிட்டத்தட்ட 2.5 மில்லியன் வெளிநாட்டு ஊழியர்கள் வசிப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

