பெய்ஜிங்: சீனாவின் பல நகரங்களில் செவ்வாய்க்கிழமையன்று ஆக அதிக வெப்பநிலை பதிவானதாகவும் இதே நிலை மேலும் சில நாள்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் உள்ளூர் வானிலை மையம் தெரிவித்தது.
சீனா முழுவதும் வெப்பநிலைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அந்நாட்டின் வெப்பநிலைக்கான மூன்று அடுக்கு எச்சரிக்கை நிலையில், அதிகபட்ச எச்சரிக்கையாகும் அது.
கிழக்கு ஜியாங்சு மாநிலத்தின் சில இடங்கள், ஷாங்காய் ஆகிய பகுதிகளில் இதற்கு முந்திய ஜூலை மாதங்களில் பதிவானதைவிட, ஆக அதிக வெப்பநிலை தற்போது பதிவாகியுள்ளது.
வரலாற்றிலேயே முதல்முறையாக ஜியாங்சு மாநிலத்தின் யிஸிங் நகரில் வெப்பநிலை 41.3 டிகிரி செல்சியசாக இருந்தது.
நீண்டநேர அதிகபட்ச வெப்பநிலை காரணமாக ஒரு சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட நேர்ந்ததாகவும் சீனாவின் சமூக ஊடக விவாதங்கள் காட்டின.
கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக வெப்பநிலை 30 டிகிரி செல்சியசுக்கும் மேல் இருப்பதாக சமூக ஊடகத்தில் ஒருவர் பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து, மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை அந்நாட்டின் நகராட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
இதற்கிடையே, பிரான்ஸ், பிரிட்டனிலும் வெப்பநிலை அதிகரித்துக்கொண்டே வருகின்றன. மேற்கு ஐரோப்பாவில் நிலவும் வெப்பஅலை காரணமாக அங்கு காட்டுத்தீ சம்பவங்கள் மூண்டன. இதைக் கட்டுப்படுத்த தீயணைப்பாளர்கள் இரவு பகல் பாராமல் போராடி வருகின்றனர்.
சென்ற ஞாயிற்றுக்கிழமை முதல் ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியசாக இருந்து வருகிறது.
செவ்வாய்க்கிழமை முதல் தெற்கு பிரான்சில் 800 ஹெக்டர் பரப்பளவில் பற்றி எரியும் காட்டுத்தீயால், கிட்டத்தட்ட 150 பேர் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
பருவநிலை மாற்றம் காரணமாக வெப்பஅலைகள் அடிக்கடி ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
உலக வெப்பநிலை அதிகரிக்கும்போது, காலப்போக்கில் அது மேலும் தீவிரமடையும் என்று அவர்கள் கருதுகின்றனர்.
தற்போது நிலவும் வெப்பநிலை மேலும் மோசமடையக்கூடும் என்று உலக வானிலை ஆய்வு மையத்தின் செய்தித் தொடர்பாளர் கிளாரி சொன்னார்.

