கியவ்: உக்ரேன்மீதான ரஷ்யப் படையெடுப்பு காரணமாக உலகமெங்கும் உணவு விலை ஏற்றம் கண்டுள்ளது.
கருங்கடல் பகுதியில் இருந்து தானியங்களை ஏற்றுமதி செய்து வந்த உக்ரேனில் தற்போது மில்லியன் டன்கணக்கில் தானியங்கள் ஏற்றுமதி செய்ய முடியாமல் கிடக்கின்றன.
ரஷ்யக் கட்டுப்பாட்டில் உள்ள கருங்கடல் பகுதியை மீண்டும் திறப்பதுதான் இதற்கு தீர்வாக இருக்கும். ஆனால், அது அவ்வளவு எளிதானது அல்ல.
இந்நிலையில், உலக உணவுத் தேவையைச் சமாளிக்கும் வகையில் உக்ரேனில் இருந்து வெளிநாடுகளுக்குத் தானிய ஏற்றுமதி தொடங்கியுள்ளது.
தானியங்களை ஏற்றிக்கொண்டு கப்பல்கள் உக்ரேனின் டேனுயூப் ஆற்றைக் கடந்து செல்ல தொடங்கிஉள்ளன.
"கடந்த நான்கு நாள்களில், 16 கப்பல்கள் பிஸ்ட்ரே ஆற்றைக் கடந்து சென்றுள்ளன. இதை தொடர்ந்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்," என்றார் உக்ரேனிய உள்கட்டமைப்பு அமைச்சர் யூரி வாஸ்கோவ்.
மேலும் 16 கப்பல்களில் தானியங்கள் ஏற்றப்பட உள்ளதாகவும் அவர் சொன்னார்.
நாளொன்றுக்கு எட்டு கப்பல்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டால், மாதாந்திர தானிய ஏற்றுமதி 500,000 டன்னாக அதிகரிக்கும் என்று அவர் சொன்னார்.
அத்துடன் கருங்கடல் பகுதியில் இருந்து தானிய ஏற்றுமதிக்கான பசுமை பாதை ஒப்பந்தம் விரைவில் ரஷ்யாவுடன் ஏற்படும் என்று தாம் நம்புவதாகவும் அவர் சொன்னார்.
இதற்கிடையே, ரஷ்யக் கட்டுப்பாட்டில் உள்ள கெர்சான் பகுதியில் உக்ரேன் ராணுவப் படையினர் மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில் 52 பேர் மாண்டுவிட்டதாக உக்ரேனிய ராணுவம் தெரிவித்தது. மேலும் ஆயுதக் கிடங்கை தாக்கி அழித்ததாகவும் அது சொன்னது.
ஆனால், அப்பகுதியில் உள்ள ரஷ்ய அதிகாரிகளோ ஏழு பேர் மாண்டுவிட்டதாகவும் 70 பேர் காயமடைந்ததாகவும் நேற்று முன்தினம் கூறியிருந்தனர்.
அமெரிக்கா அதிசக்திவாய்ந்த ஹிமார்ஸ் எனும் பீரங்கிகளை உக்ரேனுக்கு அனுப்பியுள்ள நிலையில், உக்ரேன் இத்தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. கருங்கடல் துறைமுகத்திற்குச் செல்வதற்கு இப்பகுதி முக்கியமானதாகும்.

