இங்கிலாந்தின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் மும்மரமாக நடைபெற்று வரும் வேளையில் முன்னோட்ட சுற்றுகளில் முன்னிலை வகிக்கிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்.
இங்கிலாந்து அரசியலமைப்பு சட்டப்படி, ஆளும் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே பிரதமராகவும் பதவியேற்பார். அந்த வகையில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய வம்சாவளிகளான ரிஷி சுனக், சுயெல்லா பிரேவர்மேன், பாகிஸ்தானைப் பூா்விகமாக கொண்ட முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் மற்றும் பென் வேலஸ், பென்னி மோர்டான்ட் உள்பட 11 பேர் போட்டியிடுவதாக அறிவித்தனர்.
தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்யும் காலக்கெடு நேற்று முன்தினம் மாலையுடன் முடிந்த நிலையில் சஜித் ஜாவித் உள்பட 3 பேர் போட்டியில் இருந்து பின்வாங்கினர். இதன் மூலம் கட்சித்தலைவர் பதவிக்கான முதற்கட்ட தேர்தலில் 8 பேர் களத்தில் இருந்தனா். இந்த நிலையில், முதல் சுற்று தேர்தலில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.

