ஷங்காய்: சீனாவின் ஷங்காய் நகரில் கடந்த ஒரு வாரத்தில் பதிவாகாத அளவு குறைவான கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதனால் அந்நகரில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படாமல் இருக்கலாம் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
ஷங்காயில் நேற்று முன்தினம் 47 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாயின. நேற்று முன்தினம் பதிவானதைவிட அந்த எண்ணிக்கை குறைவு. எனினும், அந்நகரில் மீண்டும் முடக்கநிலை நடப்புக்கு வரலாம் என்ற அச்சம் இன்னமும் இருந்தே வருகிறது.
கொவிட்-19 கிருமிப் பரவலை முற்றிலும் ஒழிக்கவேண்டும் என்ற அணுகுமுறையை சீனா தொடர்ந்து பின்பற்றி வருகிறது.
இதற்கிடையே, ஹாங்காங்கில் நிறக் குறிப்பைக் கொண்டு கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் முறை கிருமித்தொற்றுக்கு ஆளானோர், அங்கு வரும் பயணிகள் ஆகியோருக்கு மட்டுமே பொருந்தும் என்று சில உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. ஹாங்காங்கின் அனைத்து மக்களுக்கும் அது பயன்படுத்தப்படாது என்று கூறப்படுகிறது. இந்த முறை சீனாவில் அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டது.

