கியவ்: மேற்கத்திய நாடுகள் வழங்கும் புதிய, கூடுதல் சக்திவாய்ந்த ஆயுதங்களைக் கொண்டு தனது நாட்டின் ரஷ்ய கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உக்ரேன் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. அத்தகைய பகுதிகளின் உள்புறத்தில் இருக்கும் ராணுவத் தளங்கள், ஆயுதக் கிடங்குகள் ஆகியவற்றின் மீது உக்ரேன் தாக்குதல்களை மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள லுஹான்ஸ்க் மாநிலத்திற்கு மேல் தீப்பந்து தென்பட்டது. அங்கு பல துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தை உக்ரேனிய ராணுவம் தாக்கியதாக ரஷ்ய ஊடகங்கள் கூறின.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று தெற்கு உக்ரேனில் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலும் கிழக்கு உக்ரேனின் ரஷ்ய ஆக்கிரமிப்புப் பகுதியான டொனியெட்ஸ்க்கிலும் ஆறு ஆயுதக் கிடங்குகள் அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
உக்ரேனின் இந்த உத்தி அண்மைக் காலமாகத்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது போரில் போதுமான தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது தற்போது தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.

