லண்டன்: ஐரோப்பாவின் பல பகுதிகளில் தற்போது மோசமான அனல் காற்று வீசுகிறது. அங்கு வெப்பநிலை 40 டிகிரீ செல்சியசைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இப்போதே குளிர்காலத்தில் நிகழக்கூடிய இயற்கை எரிவாயு பற்றாக்குறைதான் ஐரோப்பிய நாடுகளின் அரசாங்கங்களுக்குப் பெரிய கவலையாக இருந்து வருகிறது. ஐரோப்பாவிற்கு இயற்கை எரிவாயுவை விநியோகிப்பதை ரஷ்யா முழமையாக நிறுத்திவிடும் என்று எதிர்பாக்கப்படுவது இதற்குக் காரணம்.
அதனால் குளிர்காலத்தில் மக்களுக்குத் தங்கள் வீடுகளில் வெப்பநிலையை அதிகரிப்பதற்குப் போதுமான வசதி இல்லாமல் போகும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
சுமார் 18 மாதங்களுக்கு முன்பு ஐரோப்பாவிற்கு இயற்கை எரிவாயு விநியோகிப்பதை ரஷ்யா குறைக்கத் தொடங்கியது. இதற்குப் பின்னால் உள்ள காரணங்கள் அதிகம் புலப்படவில்லை.
கடந்த பிப்ரவரி மாதம் உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்ததைத் தொடர்ந்து ரஷ்யா மீது ஐரோப்பா பல தடை உத்தரவுகளைப் பிறப்பித்தது. அதற்குப் பிறகு அம்மாநிலத்திற்கு இயற்கை எரிவாயு விநியோகிப்பதை ரஷ்யா மேலும் குறைத்தது.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண மாற்று ஏற்பாடுகளைச் செய்துகொள்வதற்கான வாய்ப்புகளும் ஐரோப்பாவிடம் அதிகம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு ஐரோப்பாவில் 538 பில்லியன் கியூபிக் மீட்டர் அளவு இயற்கை எரிவாயு பயன்படுத்தப்பட்டது. அதில் சுமார் கால் பங்கு ரஷ்யாவிடமிருந்து தருவிக்கப்பட்டது.
அதுவும் ஐரோப்பாவின் ஆகப் பெரிய பொருளியலான ஜெர்மனிக்குத் தேவைப்படும் இயற்கை எரிவாயுவில் பாதிக்கும் மேல் ரஷ்யாவிலிருந்து இறக்குமதியாகிறது. பிரச்சினையைக் கையாள பருவநிலை மாற்றம் தொடர்பிலான தனது இலக்குகளைத் தற்போதைக்காவது தள்ளுபடி செய்துவிட்டு பற்றாக்குறையைக் கையாள தனது எரிசக்தி ஆலைகளில் கரிமத்தையும் எண்ணெய்யையும் எரிக்க ஜெர்மனி முடிவுசெய்தது.
எனினும், பிரச்சினையை அவ்வளவு எளிதில் சரிசெய்ய முடியாது எனக் கருதப்படுகிறது. இயற்கை எரிவாயுவை ஏற்றுமதி செய்வதை ரஷ்யா நிறுத்தினால் குளிர்காலத்தில் ஜெர்மனி போன்ற நாடுகள் பெரும் இன்னலுக்கு உள்ளாகும்.
இதற்கிடையே, ஐரோப்பாவில் தற்போது வரலாறு காணாத அளவில் வெப்பநிலை பதிவாகி வருகிறது.
பிரான்சின் சில பகுதிகளில் இவ்வாரமும் அடுத்த வாரமும் வெப்பநிலை 40 டிகிரி செல்சியசைத் தொடக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளும் அவதிப்படுகின்றன.
ரஷ்யாவிலிருந்து இயற்கை எரிவாயு விநியோகம் நிறுத்தப்படவுள்ளது

