பெர்லின்: அடுத்த மாத இறுதிவரை மேலும் 2,000 விமானச் சேவைகளை ரத்து செய்ய 'லுஃப்தான்சா' விமான நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்நிறுவனம் இதுவரை கிட்டத்தட்ட 6,000 விமானச் சேவைகளை ரத்து செய்திருக்கும்.
ஐரோப்பாவில் பயணச் சேவைகளில் தொடர்ந்து இடையூறுகள் ஏற்பட்டுவருவதால் இந்நிலை உருவெடுத்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெரும்பாலான 'லுஃப்தான்சா' சேவைகள் உள்நாட்டுச் சேவைகள். அவை ஜெர்மனியின் மியூனிக் அல்லது ஃபிராங்க்ஃபர்ட் நகரங்களிலிருந்து இயங்கவிருந்ததாக நிறுவனம் தெரிவித்தது.
தனது ஊழியர்களில் பலர் கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு ஆளானதால் 'லுஃப்தான்சா' முன்னதாக 3,100 விமானச் சேவைகளை ரத்து செய்திருந்தது. அதற்குப் பிறகு மேலும் 770 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
ஐரோப்பாவின் இதர சில விமானச் சேவைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலுக்குப் பிறகு அதிகமானோர் மீண்டு விமானப் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதனால் விமானங்களில் கூடுதல் இருக்கைகளுக்கான தேவை அதிகரித்திருப்பது, பயணத் துறையில் மனிதவளப் பற்றாக்குறை உள்ளிட்டவை இதற்கான காரணங்களால் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.

