கியவ்: உக்ரேனில் ரஷ்யா நடத்திய மற்றுமோர் ஏவுகணைத் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 23 பேர் கொல்லப்பட்டனர்.
உக்ரேன் தலைநகர் கியவ்வில் இருந்து 268 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மத்திய பகுதியான வினிட்சியா நகரில் ரஷ்யா நேற்று முன்தினம் தாக்குதலில் ஈடுபட்டது.
அங்குள்ள முக்கிய அரசு அலுவலக கட்டடம் மீது சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
இதில் அந்த கட்டடம் மட்டும் அல்லாமல் அருகில் இருந்த குடியிருப்புக் கட்டடங்களும் கடுமையாக சேதம் அடைந்து, தீப்பிடித்து எரிந்தன.
இந்தத் தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 23 அப்பாவி பொதுமக்கள் இறந்தனர். 90க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
அடுத்தடுத்து 8 முறை நடந்த ஏவுகணை வீச்சில் 50க்கும் மேற்பட்ட கார்கள், வாகனங்கள் தீயில் கருகின.
ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு உக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
பொதுமக்கள்மீது வேண்டுமென்றே குறிவைத்து இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.
இதற்கிடையே, ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதிகளில் அதிகமானோர் மண்ணில் புதைக்கப்பட்டுள்ளதாக அரசு சாரா நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.

