தமது சொத்தான $158 பில்லியன் ($113 பில்லியன் அமெரிக்க டாலர்) முழுவதையும் நன்கொடையாகக் கொடுக்க பில் கேட்ஸ் திட்டமிட்டுள்ளார்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனரான பில் கேட்ஸ் உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றவர். கொடை உள்ளம் படைத்த அவர் கடந்த 2000ஆம் ஆண்டு பில் ஆண்ட் மெலிண்டா கேட்ஸ் என்ற அறநிறுவனத்தைத் தொடங்கினார்.
இந்த அறநிறுவனத்தில் சுகாதாரம், கல்வி போன்ற பல துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பில் கேட்ஸ் தனது அனைத்து சொத்துக்களையும் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்குவதுடன் உலகச் செல்வந்தர்கள் பட்டியலிலிருந்து விலகத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பில் கேட்ஸ் இந்த மாதம் 20 பில்லியன் அமெரிக்க டாலர்களை பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்குகிறார்.
"எதிர்காலத்தில் எனக்கும் எனது குடும்பத்திற்கும் நான் செலவழிப்பதைத் தவிர எனது அனைத்து சொத்துக்களையும் அறக்கட்டளைக்கு வழங்க திட்டமிட்டுள்ளேன். நான் இந்தப் பணத்தைக் கொடுப்பதை தியாகமாக நினைக்கவில்லை. மிகப் பெரிய சவால்களைச் சமாளிப்பதில் நான் ஈடுபட்டிருப்பதை பாக்கியமாக உணர்கிறேன். மேலும் எனது வளங்களை சமூகத்திற்குத் திருப்பித் தர வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது என்று நம்புகிறேன்," என்று பில் கேட்ஸ் கூறியுள்ளார்.

