அண்மையில் கொரோனா கிருமியின் பல்வேறு திரிபுகளால் சிங்கப்பூரில் கொவிட்-19 நோய் தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்து வந்துள்ளன.
அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான், பிரேசில் போன்ற பல நாடுகளிலும் கொரோனா தொற்று எண்ணிக்கை அண்மைய காலமாக அதிகரித்து வந்துள்ளது. இந்நிலை மிகவும் கவலை அளிப்பதாக உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறியுள்ளார்.
"கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இது சுகாதார அமைப்புகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மீது மேலும் அழுத்தத்தைத் கொடுக்கிறது. இறப்புகளின் போக்கு அதிகரித்து வருவது குறித்தும் கவலைப்படுகிறேன் ஓமிக்ரானின் திரிபுகளான பி.ஏ.4 மற்றும் பி.ஏ.5 போன்றவை உலகம் முழுவதும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது," என்றார்.
இந்த நிலையில் புதிய கொரோனா தொற்று அலைகள் வர வாய்ப்பு உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
"கொரோனாவின் புதிய அலைகளுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். ஒவ்வொரு புதிய மாறுபாடும் மிகவும் பரவக்கூடியதாகவும் நோய் எதிர்ப்பு சக்தியை தவிர்க்கக் கூடியதாகவும் இருக்கும். அதிக எண்ணிக்கையில் பாதிப்பு இருக்கலாம். தற்போது மாறி வரும் சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து நாடுகளும் தரவு சார்ந்த திட்டத்தை வைத்திருக்க வேண்டும்," என்றார் அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமி நாதன்.
சமீப காலமாக உலகளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான், பிரேசில் ஆகிய நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

