சான் ஃபிரான்சிஸ்கோ: சான் ஃபிரான்சிஸ்கோ அனைத்துலக விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அனைத்துலக முனையத்தில் இருந்து பயணிகள், பணியாளர்கள் என அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
அதையடுத்து, காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் சந்தேகத்திற்குரிய வகையில் எதுவும் கண்டறியப்படவில்லை என உறுதி செய்யப்பட்ட பிறகு, அனைத்துலக முனையம் அதன் செயல்பாடுகளைத் தொடர்ந்தது.
முன்னதாக, விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதன் தொடர்பில் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. அதையடுத்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், சந்தேகத்திற்குரிய பொட்டலம் ஒன்றைக் கண்டுபிடித்தனர்.
விசாரணையின் முடிவில் ஆடவர் ஒருவரைக் கைது செய்த அதிகாரிகள், அவரைத் தடுப்புக்காவலில் வைத்துள்ளதாக ஏபி செய்தி நிறுவனம் தெரிவித்தது.

