கோத்தபய ராஜபக்சே: பொருளாதார நெருக்கடியைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தேன்

கோத்தபய ராஜபக்சே: பொருளாதார நெருக்கடியைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தேன்

1 mins read
2fb32cec-db4c-4a08-98bb-1eb9a8bee696
-

பொருளாதார நெருக்கடியைத் தடுக்க தன்னால் ஆன அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்ததாக இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள இலங்கையில், மக்கள் போராட்டம் வலுத்தது. அவர்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, மாலத்தீவு தப்பிச்சென்று, அங்கிருந்து சிங்கப்பூர் வந்தார்.

அவர் தனது பதவி விலகல் கடிதத்தை மின்னஞ்சல் மூலமாக் கடந்த வியாழக்கிழமை சிங்கப்பூரிலிருந்து சபாநாயகர் யபா அபேவர்த்தனாவுக்கு அனுப்பினார். அதை அவர் ஏற்றுக்கொண்டார்.

நாட்டை விட்டு வெளியேறும் முன்பாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை இடைக்கால அதிபராக கோத்தபய நியமித்திருந்தார். அதன்படி, இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

அவருக்குத் தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். புதிய அதிபரைத் தேர்வு செய்யும் பணி இன்னும் ஒரு வாரத்தில் முடிவடையும் என சபாநாயகர் அறிவித்துள்ளார். புதிய அதிபரை தேர்வு செய்ய, நாடாளுமன்றத்தில் வரும் 20-ம்தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

இந்த நிலையில் கோத்தபய ராஜபக்சேவின் பதவி விலகல் கடிதத்தை இலங்கை நாடாளுமன்றத்தின் துணைச் செயலாளர் தாமிகா தசனாயக்கே பத்திரிகையாளர் சந்திப்பில் வாசித்தார்.

"அனைத்துக் கட்சி தலைமையிலான அரசை அமைப்பதற்கான முயற்சி உட்பட, பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தேன் என்பது எனது தனிப்பட்ட நம்பிக்கை," என்று கோத்தபய ராஜபக்சே அக்கடிதத்தில் தெரிவித்திருந்தார்.