ஜி20 நிதி அமைச்சர்களிடம் இந்தோனீசிய நிதி அமைச்சர் வலியுறுத்து
பாலி: உலகளாவிய பொருளியல் மீட்சிக்கான தங்கள் இலக்கின்மீது தொடர்ந்து கவனம் செலுத்த ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்களிடம் இந்தோனீசியா வலியுறுத்தியுள்ளது.
எனினும், இந்தோனீசியாவின் பாலித் தீவில் நடைபெற்ற தலைவர்களின் சந்திப்பு, முறைப்படி அரசாங்க அறிவிப்பின்றி முடிவுறக்கூடும் என்று மூலங்கள் தெரிவித்தன.
இந்தச் சந்திப்புக்குத் தலைமை தாங்கும் இந்தோனீசிய நிதி அமைச்சர் முல்யானி இந்திராவத்தி, இந்தச் சந்திப்பில் நடைபெற்ற நிகழ்வுகளின் சாராம்சம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுவதாக இந்த விவகாரம் பற்றி அறிந்த இரு மூலங்கள் கூறின. அமெரிக்க நிதி அமைச்சர் ஜெனட் எலன், கனடிய நிதி அமைச்சர் கிறிஸ்டியா ஃபிரீலந்து உள்ளிட்ட மூத்த மேற்கத்திய தலைவர்கள், உக்ரேன் மீது ரஷ்யா தொடுத்துவரும் போருக்குக் கண்டணம் தெரிவித்தனர். போர் காரணமாக ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பொருளியல் பாதிப்புக்குக் காரணமான ரஷ்ய அதிகாரிகளை அவர்கள் சாடினர்.
பாலித் தீவில் இடம்பெற்ற சந்திப்பில் மெய்நிகர் வாயிலாகக் கலந்துகொண்ட உக்ரேனிய நிதி அமைச்சர் செர்கி மார்ஷென்கோ, ரஷ்யாவுக்கு எதிராக மேலும் கடுமையான தடை உத்தரவுகளை மேற்கத்திய நாடுகள் பிறப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
ரஷ்யா மீது ஏற்கெனவே கடுமையான தடை உத்தரவுகளைப் பிறப்பித்துள்ள மேற்கத்திய நாடுகள், உக்ரேனுக்கு எதிராக ரஷ்யா போர்க் குற்றங்களைப் புரிந்து வருவதாக சாடியுள்ளன. இதை ரஷ்யா பகிரங்கமாக மறுத்துள்ளது. சீனா, இந்தியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட ஜி20 நாடுகள் இந்த விவகாரத்தில் மௌனம் காத்து வருகின்றன.
இப்படி இருக்கையில், உக்ரேன்-ரஷ்யா போர் தொடர்பில் ஜி20 நாட்டுத் தலைவர்கள் தங்கள் கருத்து வேறுபாடுகளை ஒருபக்கம் வைத்துவிட்டு, உணவுப் பாதுகாப்பு நெருக்கடி, பணவீக்க அதிகரிப்பு போன்ற விவகாரங்களை எதிர்கொள்வதில் தொடர்ந்து கவனம் செலுத்துமாறு திருவாட்டி முல்யானி கேட்டுக்கொண்டார்.
கொவிட்-19 பெருந்தொற்றுக்கு பிந்தைய நிதி நிலைத்தன்மை, பருவநிலை மாற்றம் தொடர்பிலான நிதி அபாயங்கள் உள்ளிட்ட தலைப்புகளை ஒட்டி ஜி20 தலைவர்கள் நேற்று பேச இருந்தனர்.

