உலகின் ஆகப்பெரிய சூதாட்ட மையத்தில் முடக்கநிலை நீட்டிப்பு
ஹாங்காங்: மக்காவ் அரசாங்கம், சூதாட்டக்கூடங்கள் மற்றும் இதர வர்த்தகங்களின் முடக்கத்தை வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 22) வரை நீட்டித்துள்ளது. உலகின் ஆகப்பெரிய சூதாட்ட மையமான அங்கு கொவிட்-19 தொற்று அதிகரித்து இருப்பதையடுத்து இந்தக் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக மக்காவ் அரசாங்கத்தின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு முடக்கநிலை நாளை முடிவடைய இருந்த நிலையில் இப்போது இது நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாட்டிற்கு வெளியே மலேசிய கடற்படைக் கப்பலின் முதல் ஏவுகணைப் பயிற்சி
கோலாலம்பூர்: மலேசிய கடற்படைக் கப்பல் ஒன்று, மலேசிய நீர்நிலைக்கு வெளியே முதன்முறையாக ஏவுகணைப் பயிற்சி ஒன்றை நடத்தியுள்ளது. 26 நாடுகளைச் சேர்ந்த 38 கப்பல்கள், நான்கு நீர்மூழ்கிக் கப்பல்கள், 170க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் பங்கெடுத்த இந்தக் கடல் பயிற்சி, ஹவாயித் தீவுக்கு அருகே நடைபெற்றது.
சேவைப் பயன்பாட்டில் இல்லாத போர்க்கப்பல் ஒன்றைக் குறிவைத்து அந்த ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது.
மலேசிய கடற்படை இந்தப் பயிற்சியில் பங்கெடுத்து இருப்பது இது இரண்டாவது முறை.
'உடலில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக டிரம்ப்பின் முதல் மனைவி உயிரிழந்தார்'
நியூயார்க்: அமெரிக்க முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் முதல் மனைவி இவானா டிரம்ப்பின் (படம்) மரணம் குறித்த புதிய தகவல் ஒன்றை நியூயார்க் நகர தலைமை மருத்துவ ஆய்வாளர் வெளியிட்டுள்ளார்.
இவானாவின் உடலில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அவருடைய மரணம் குறித்த கூடுதல் தகவல் வெளியிடப்படவில்லை.
தமது இல்லத்தில் உள்ள படிக்கட்டுகளில் இருந்து இவானா, 73, விழுந்தாரா என்பது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக இந்த விவகாரம் பற்றி அறிந்த இரு சட்ட அமலாக்க அதிகாரிகள் கூறினர்.
இத்தாலியப் பிரதமர் பதவியிலிருந்து விலக உறுதியாக இருக்கும் டிராகி
ரோம்: அடுத்த வாரம் இத்தாலியப் பிரதமர் பதவியில் இருந்து விலக தாம் தீர்மானமாக இருப்பதாக திரு மாரியோ டிராகி (படம்) கூறியுள்ளார். இவருடைய ஆளும் கூட்டணியில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவு இவருக்கு இல்லாததே இவருடைய இந்த முடிவுக்குக் காரணம்.
இத்தாலிய அதிபர் செர்ஜியோ மட்டரெல்லா, கடந்த வியாழக்கிழமை திரு டிராகியின் பதவி விலகலை ஏற்க மறுத்துவிட்டார். தம் ஆளும் கூட்டணியின் ஆதரவைக் கூட்டிக்கொள்ள முயற்சி செய்யுமாறு திரு டிராகியிடம் அவர் வலியுறுத்தினார்.
திரு டிராகியின் பதவி விலகல், இத்தாலியை அரசியல் குழப்பத்திற்கு இட்டுச்செல்லும். உக்ரேனில் ரஷ்யா தொடுத்துவரும் போரால், ஐரோப்பா ஏற்கெனவே எரிசக்தி நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது.
கடந்த ஆண்டு தொடக்கத்தில் திரு டிராகியை அதிபர் மட்டரெல்லா பிரதமர் பதவிக்கு நியமித்தார். ஆளும் கூட்டணியில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவு இருக்கும் என்றால் மட்டுமே தாம் பதவியில் இருக்கப்போவதாக திரு டிராகி குறிப்பிட்டுள்ளார்.

