போர்ச்சுகலில் அனல்காற்றுக்கு ஒரே வாரத்தில் 659 பேர் மரணம்
லண்டன்: பிரிட்டனில் அடுத்த சில நாள்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியசை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு சில பகுதிகளில் 41 டிகிரி செல்சியசைக்கூட எட்டும் என்பதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு அங்கு 2019ல் நிலவிய 38.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையே ஆக அதிகமாக இருந்தது.
அனல் கக்கும் வெப்பநிலைக்காரணமாக, பிரிட்டிஷ் மக்கள் கடற்கரையோர நகரங்களை நோக்கி படையெடுக்கத் தொடங்கிஉள்ளனர்.
கடற்கரையோர நகரங்களில் மக்கள் நடமாட்டம் சராசரியாக
10 விழுக்காடு அதிகரித்துள்ளது என்றும் அதேசமயம் லண்டனில் அது குறைந்துள்ளதாகவும் ஸ்பிரிங்போர்ட் எனும் தகவல் குழு கூறுகிறது.
விமானங்கள் தாமதமாவது, ரத்து செய்யப்படுவது போன்ற குழப்பங்களாலும் அந்நாட்டு மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தவிர்த்து உள்ளூர் கடற்கரையோர நகரங்களுக்குச் செல்ல விரும்புவதாகவும் அது சொன்னது.
இதற்கிடையே, பிரான்சில் வெப்பநிலை 41 டிகிரி செல்சியசை எட்டும் என்று அந்நாட்டு வானிலை மையம் எச்சரித்துள்ளது.
அனல்காற்றால், காட்டுத்தீ பரவல் தீவிரமடைந்துள்ளதால் பிரான்சில் இருந்து 14,000த்திற்கும் மேற்பட்டோர் தங்களது வசிப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள னர்.
ஸ்பெயின், குரோவேஷியா, கிரீஸ் ஆகிய நாடுகளிலும் காட்டுத்தீ பரவி வருகிறது.
ஸ்பெயினில் 3,200 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அங்கு சென்ற வாரத்தில் ஒருநாள் அதிகபட்சமாக 45.7 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்தியது.
அங்கு அனல்காற்று திங்கட்கிழமை முடிவுக்கு வந்தாலும், தொடர்ந்து வெயில் வாட்டி வதைக்கும் என்று வானிலை மையம் கூறிஉள்ளது.
போர்ச்சுகலில் காட்டுத்தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும் சென்ற ஒரு வாரத்தில், அனல்காற்று காரணமாக கிட்டத்தட்ட 659 பேர் மாண்டுவிட்டதாக போர்ச்சுகல் சுகாதார அமைச்சு சொன்னது.
ஆக அதிகமாக வியாழக்கிழமை அன்று 440 பேர் மாண்டுவிட்டனர். அன்றைய தினம் வானிலை ஆய்வு மையம் உள்ள விஸியு மாவட்டத்தில் 47 டிகிரி செல்சியஸ் வெயில் சுட்டெரித்ததாக மையம் சொன்னது.

