கவாலா: ஆயுதங்களை ஏற்றிச் சென்ற சரக்கு விமானம் ஒன்று கிரிஸ் நாட்டில் விபத்துக்கு உள்ளானதில், அதிலிருந்த எட்டுப் பேர் மாண்டுவிட்டனர்.
அன்டோவ் அன்-12 எனும் அந்த உக்ரேனிய விமானம் கிட்டத்தட்ட 11 டன் ஆயுதங்களை பங்ளாதேஷிற்கு ஏற்றிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
பெரிய நெருப்பு பந்து ஒன்று விழுவதைப் போல் அந்த விமானம் எரிந்துகொண்டே கீழே விழுவதை இணையத்தில் பரவும் காணொளிகள் காட்டுகின்றன.
செர்பியாவில் இருந்து உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை இரவு புறப்பட்ட அந்த விமானம் ஜோர்டான் நோக்கி சென்று கொண்டிருந்தது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக கவாலா விமான நிலையத்தில் அந்த விமானம் அவசரமாகத் தரையிறங்கவிருந்தது. ஆனால், விமான நிலையத்திற்கு 40 கி.மீ. தொலைவுக்கு முன்பே அது விபத்தில் சிக்கியது.
கீழே விழுந்த விமானம் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கொழுந்துவிட்டு எரிந்ததாக அப்பகுதிவாசிகள் கூறுகின்றனர்.
எரிந்த விமானத்தில் இருந்து நச்சுக்காற்று வெளியேறக்கூடும் என்பதால், ஆள் இல்லா வானூர்தி மூலம் விபத்து பகுதி கண்காணிக்கப்பட்டது. அப்பகுதியைச் சுற்றி 2 கி.மீட்டர் தூரத்திற்கு மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

