ஷாங்காய்: பெரும்பாலான பகுதிகளில் கிருமிப் பரவல் மோசமடைந்துள்ளதால், சீனாவில் அன்றாட தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதிலும் ஷாங்காய் நகரில் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக அதன் சுகாதார துணை தலைவர் ஸாவ் டன்டன் சொன்னார்.
சீனாவில் சனிக்கிழமையன்று 580 புதிய தொற்றுச் சம்பவங்கள் பதிவானதாக தேசிய சுகாதார ஆணையம் சொன்னது. இந்த ஆண்டு மே மாதம் 23ஆம் தேதிக்குப் பிறகு ஆக அதிக எண்ணிக்கையாகும் இது.
குவாங்சியில் முந்திய நாளில் 40ஆக இருந்த தொற்று பாதிப்பு நேற்று 244ஆனது.
ஷாங்காயில் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு வெளியே இம்மாதம் 3ஆம் தேதிக்குப் பிறகு 3 தொற்று சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு நேற்று மட்டும் மொத்தம் 26 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் சீனாவின் அதிகமான பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன. தொழில்கள், உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளன. முடக்கநிலை காரணமாக இரண்டாம் காலாண்டிற்கான பொருளியல் வளர்ச்சி 0.4 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. எனவே, 5.5 விழுக்காடாக முன்னுரைக்கப்பட்டிருந்த ஆண்டு பொருளியல் வளர்ச்சியை எட்டுவது சிரமம் என்று கூறப்படுகிறது.

