செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
b3d8a824-6d10-4d25-9ebd-12d7ecd528e6
-

எவர்ட்டனை வீழ்த்தியது ஆர்சனல்

பால்டிமோர்: பால்டிமோரில் நடைபெற்ற நட்புமுறை காற்பந்தாட்டத்தில் எவர்ட்டன் குழுவை எதிர்கொண்டது ஆர்சனல். இந்த ஆட்டத்தில் விழுந்த இரண்டு கோலுக்கு ஜேசுஸின் ஆட்டத் திறனே காரணம் என்று பாராட்டினார் அதன் நிர்வாகி அர்டெட்டா.

45 மில்லியன் யூரோவிற்கு ($74.7 மில்லியன் வெள்ளி) மான்செஸ்டர் சிட்டியில் இருந்து ஆர்சனலுக்குச் சென்றுள்ளார் ஜேசுஸ்.

நேற்றைய ஆட்டத்தில் 33வது நிமிடத்தில் முதல் கோலைப் போட்ட ஜேசுஸ், இரண்டாவது கோல் போட புக்காயோ சாகாவிற்கு உதவியாக இருந்தார். எனவே

2-0 என்ற கோல் கணக்கில் எவர்ட்டனை வெற்றி கொண்டது ஆர்சனல்.

100 மீ. ஓட்டம்: 3 பதக்கங்களையும் வென்றது அமெரிக்கா

ஒரிகான்: உலக சாம்பியன்‌ஷிப் திடல்தடப் போட்டியில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார் அமெரிக்காவின் ஃபிரெட் கெர்லி. அவர் 9.86 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்தார்.

சக நாட்டவர்களான மார்வின் பிரேசி வெள்ளிப் பதக்கமும் டிரேவோன் புரோம்வெல் வெண்கலப் பதக்கமும் வென்றனர். 1991ஆம் ஆண்டிற்குப் பிறகு, உலக 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் மூன்று பதக்கங்களையும் மீண்டும் அமெரிக்காவே வென்றுள்ளது.

இலங்கையில் 100வது நாளாக தொடரும் மக்கள் போராட்டம்

கொழும்பு: இலங்கையில் ராஜபக்சே சகோதரர்களைப் பதவியில் இருந்து நீக்குவதற்காக, காலிமுகத்திடலில் தொடங்கிய மக்கள் போராட்டம் நேற்று 100வது நாளை எட்டியது.

இலங்கையில் நிலவும் விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இரண்டு நாள் போராட்டமாக சென்ற ஏப்ரல் 9ஆம் தேதியன்று இளையர்கள் குழுவொன்று இதை ஆரம்பித்தது.

அதன் பிறகு, அதிபர் மாளிகைக்கு முன்னால் அவர்கள் முகாமிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சேவும் அதிபராக இருந்த கோத்தபாய ராஜபக்சேவும் பதவியில் இருந்து விலகினர்.

அதைத் தொடர்ந்து, பிரதமராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க, தற்காலிக அதிபராகவும் பதவி வகிக்கிறார். ஆனால், மக்கள் போராட்டம் இப்போது ரணில் பக்கம் திரும்பியுள்ளது. அவரும் பதவி விலக வேண்டும் என்று பொதுமக்கள் கோரி வருகிறார்கள்.