செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
24793d22-86e8-410b-bc3c-25afb9cc13ed
-

மோசடி அழைப்பு: 1 மில்லியன் ரிங்கிட் ஏமாந்த பெண் தொழிலதிபர்

ஜோகூர் பாரூ: மலேசியாவில் பெண் தொழிலதிபர் ஒருவர் மோசடி அழைப்பிற்கு 1 மில்லியன் ரிங்கிட்டை (315,500 வெள்ளி) ஏமாந்துவிட்டார்.

சென்ற மே மாத மத்தியில் அப்பெண்ணிற்கு வருமான வரித்துறை அதிகாரி என்று கூறிய ஒருவரின் அழைப்பு வந்தது. அதிகாரியாக நடித்த அவர், அப்பெண்ணுடைய நிறுவனம் வரி நிலுவை வைத்துள்ளதாகக் கூறியிருக்கிறார்.

அதன் பிறகு, 16 வெவ்வேறு வங்கிகளுக்கு அப்பெண் 900,000 ரிங்கட் தொகையை அனுப்பியுள்ளார். தமது இணைய வங்கிச் சேவையைப் பயன்படுத்தவும் மோசடி நபருக்கு அப்பெண் அனுமதி அளித்துள்ளார்.

சனிக்கிழமையன்று தமது வங்கிக்கணக்கைப் பார்த்த அப்பெண்ணிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவருக்குத் தெரியாமல் 122,300 ரிங்கிட் வெவ்வேறு வங்கிக்கணக்கு களுக்கு அனுப்பப்பட்டிருந்ததைப் பார்த்த பிறகு, அன்றைய நாளே போலிசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக ஜோகூர் தலைமை போலிஸ் அதிகாரி கமருல் ஜமான் சொன்னார்.

7,000 கிலோ யானைத் தந்தம், விலங்கு கொம்புகள் கடத்தல் முறியடிப்பு

போர்ட் கிள்ளான்: மலேசிய அதிகாரிகள் 80 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள யானை தந்தம் உள்ளிட்ட விலங்குகளின் உடல் உறுப்புகளை மீட்டனர். ஆப்பிரிக்காவில் இருந்து வந்த கப்பலை இம்மாதம் 10ஆம் தேதி அதிகாரிகள் சோதனையிட்டபோது அவை சிக்கின.

இவற்றில் 6,000 கிலோவுக்கும் கூடுதலான யானைத் தந்தங்கள், 25 கிலோ காண்டா மிருக கொம்புகள், 100 கிலோ எறும்புதின்னியின் செதில்கள், மேலும் 300 கிலோவிற்கு விலங்குகளின் எலும்புகள், கொம்புகள் ஆகியவையும் அவற்றில் இருந்தன. வேறு ஆசிய நாடுகளுக்குக் கடத்திச் செல்வதற்காக அவை மலேசியாவுக்கு கொண்டுவரப்பட்டதா என்பது தெளிவாக தெரியவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் பெரிய அளவில் மீட்கப்பட்ட மிருகங்களின் உடல் பாகங்கள் இவையென அரச மலேசிய சுங்கத் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. படம்: இபிஏ

மலேசிய நாடாளுமன்றத்தில் கட்சித் தாவல் தடுப்புச் சட்ட மசோதா தாக்கல்

கோலாலம்பூர்: மலேசிய நாடாளுமன்றத்தில் கட்சித் தாவல் தடுப்புச் சட்ட மசோதாவை அரசாங்கம் நேற்று தாக்கல் செய்தது. நாடாளுமன்ற சிறப்புக் குழுவின் பரிந்துரைப்படி மசோதாவில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்த மசோதாவிற்கு, 222 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் 147 பேரின் ஆதரவு தேவை. ஆனால், ஆளும் கட்சிக்கு 116 உறுப்பினர்கள் மட்டுமே இருப்பதால், எதிர்க்கட்சியின் ஆதரவு வேண்டும். பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிற்கும் எதிர்கூட்டணியான பக்கத்தான் ஹரப்பானுக்கும் இடையிலான நம்பிக்கை ஒப்பந்தம் இம்மாத இறுதியோடு முடிவடைய உள்ள நிலையில், இச்சட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.