கோலாலம்பூர்: மலேசியாவில் 15 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்து வதற்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. தொழிற்சாலை, கட்டுமானம், சேவை ஆகிய 3 துறைகளில் அவர்கள் பணிபுரியலாம்.
உள்துறை அமைச்சுக்கும் மனிதவள அமைச்சுக்கும் இடையில் நடைபெற்ற வெளிநாட்டு ஊழியர் நிர்வகிப்பு மீதான செயற்குழு கூட்டத்தில், இதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் ஹம்சா சய்னூடின் தெரிவித்
தார்.
இந்தியா, தாய்லாந்து, கம்போடியா, நேப்பாளம், மியன்மார், லாவோஸ், வியட்னாம், பிலிப்பீன்ஸ், பாகிஸ்தான், இலங்கை, பங்ளாதேஷ், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தோனீசியா, கஜகஸ்தான் ஆகிய 15 நாடுகளைச் சேர்ந்த ஊழியர்கள் மலேசியாவில் வேலை செய்ய அனுமதிக்கப்படுவதாக உள்துறை அமைச்சின் இணையத்தளம் கூறுகிறது.
அத்துடன் மலேசியாவிற்கு ஊழியர்களை அனுப்புவதை இந்தோனீசியா நிறுத்திவைத்துள்ள விவகாரத்தில் நிலவும் கருத்து வேறுபாட்டினைக் களைய, மனிதவள அமைச்சும், குடிநுழைவு துறையும் உடனடியாக இந்தோனீசிய தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தும்படியும் உள்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
எத்தகைய கருத்து வேறுபாடு என்பது பற்றி கருத்துரைக்க மறுத்த அவர், இன்னும் 2 நாள்களில் பேச்சுவார்த்தை நடத்தப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

