இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட மூன்று வேட்பாளர்கள் முன்மொழியப்பட்டிருப்பதாக அந்நாட்டு நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது. இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்சே சென்ற வாரம் பதவி விலகினார். பிரதமரும், இடைக்கால அதிபருமான ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அமைச்சரான டலஸ் அலகப்பெருமா, இடதுசாரி தலைவரான அனுரா திஸநாயக்க ஆகியோர் அதிபர் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர்.
முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசா அதிபர் தேர்தலில் இருந்து விலகிக்கொள்வதாகக் கூறியுள்ளார். திரு டலசுக்கு தன்னுடைய ஆதரவை அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை நடைபெறும் ரகசிய வாக்களிப்பில் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பர். புதிய அதிபர் 2024ஆம் ஆண்டு வரை பதவி வகிப்பார்.
இதனிடையே, திரு ரணில் விக்ரமசிங்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் இன்று இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

