சான்ட்விச்சால் வந்த வினை: $2,500 அபராதம்

சான்ட்விச்சால் வந்த வினை: $2,500 அபராதம்

2 mins read
abe9f37a-ff0e-43b6-a0b0-edde2a3d5376
படம்: ஜெசிக்கா லீ/டிக்டாக் -

சிங்கப்பூரிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்த ஒருவருக்கு $2,542 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. காரணம், அவர் வைத்திருந்த பாதி சாப்பிட்டு சான்ட்விச் துண்டு.

இடைமாற்று பயணியான ஜெசிக்கா லீ ஆஸ்திரேலியாவுக்கு செல்ல விமானம் ஏறுவதற்கு முன் சாங்கி விமான நிலையத்தில் உள்ள 'சப்வே' சான்ட்விச் கடையில் ஒரு கோழி சான்ட்விச் வாங்கினார். அந்த சான்ட்விச்சில் கீரை, தக்காளி போன்ற இதர உணவுப் பொருள்களும் வைக்கப்பட்டிருந்தன. ஒரு அடி நீளமான அந்த சான்ட்விச்சை பாதி சாப்பிட்டு, மீதியை பயணத்தின்போது சாப்பிட எண்ணினார். ஆனால் விமான ஏறியவுடன் அதை பற்றி முற்றிலும் மறந்துவிட்டார்.

ஆஸ்திரேலியாவில் தரையிறங்கி, குடிநுழைவு சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது தான், அதிகாரிகள் ஜெசிக்காசின் பையில் இருந்த சான்ட்விச் கண்டுபிடித்தனர். சான்ட்விச்சில் கோழியும், கீரையும் இருந்ததால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தனது சான்ட்விச்சில் கோழியும் கீரையும் இருந்ததை தான் மறந்துவிட்டதாக ஜெசிக்கா தனது டிக்டாக் பக்கத்தில் குறிப்பிட்டார். தான் வேண்டுமென்றே இதைபற்றி அதிகாரிகளிடமிருந்து மறைக்கவில்லை என்றும், சான்ட்விச் தனது பையில் இருந்ததை உண்மையிலே மறந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

ஆஸ்திரேலியாவுக்குள் மாமிசம், காய்கறிகள் ஆகியவற்றை கொண்டுவரக்கூடாது. அவ்வாறு கொண்டுவந்தால், அதை முறைப்படி அதிகாரிகளிடம் தெரிவிக்கவேண்டும். தெரிவிக்காத பட்சத்தில், அபராதம் விதிக்கப்படலாம். பயணிகளுக்கு இதை நினைவூட்டும் விதத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ள அனைத்து அனைத்துலக விமான நிலையங்களில் இதுபற்றி எச்சரிக்கை பதாகைகள் உள்ளன.

ஜெசிக்கா இன்னும் 28 நாள்களில் $2,542 கட்டவேண்டும். டிக்டாக் தளத்தில் அவர் பதிவேற்றம் செய்த புலம்பல் காணொளி 800,000க்கு அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.