'இலங்கையின் நிலை மலேசியாவிற்கு ஏற்படாது'

'இலங்கையின் நிலை மலேசியாவிற்கு ஏற்படாது'

2 mins read
7ab57bc9-201d-463c-b3e9-b71da24bb8f0
-

கோலாலம்பூர்: மலேசியாவின் பொருளியல் நிலையாக இருப்பதாகவும் இலங்கையைப் போல் நொடித்துப்போகும் அபாயம் இல்லை என்றும் அந்நாட்டின் நிதி அமைச்சர் ஸஃப்ருல் அஜிஸ் சொன்னார்.

இவ்வாண்டு பொருளியல் 5.75 விழுக்காடு வளர்ச்சி காணும் என்ற அனைத்துலக பண நிதியத்தின் முன்னுரைப்பை சுட்டிய அவர், அதுவே பொருளியல் குறித்த தமது நம்பிக்கைக்குக் காரணம் என்று சொன்னார்.

"நாட்டைத் திவாலாக்கக்கூடிய பொருளியல் பிரச்சினைகளை மலேசியா எதிர்நோக்குவதாக நிதியம் கூறவில்லை.

"நம்முடைய பொருளியல் குறியீடுகளை இலங்கையோடு ஒப்பிட்டு பார்த்தால், அந்நாட்டைவிட நம்முடைய பொருளியல் பல மடங்கு நிலையாக உள்ளதை அது தெளிவுபடுத்துகிறது," என்று நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய அவர் தெரிவித்தார்.

இருப்பினும், நாட்டின் நிதியைச் சரிவர நிர்வகித்து, கடனைத் தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

ஓர் ஆண்டுக்கான கடனைத் திருப்பி செலுத்தாத குறியீடு இலங்கையின் 19.4 விழுக்காடோடு ஒப்பிடுகையில் மலேசியாவுடையது 2.43 விழுக்காடாக இருப்பதாக புளூம்பர்க் தகவல் கூறுகிறது.

ஆனால் இந்த குறியீடு, 1.5 விழுக்காட்டிற்கு மேல் இருந்தால் கடனைத் திருப்பி செலுத்தாமல் போவதற்கான ஆபத்து அதிகம் உள்ளதைக் காட்டுவதாகக் கொள்ளப்படுகிறது.

செம்பனை எண்ணெய், கச்சா எண்ணெய் ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளதால், நாட்டிற்கு வரி வருமானமாக

10 பில்லியன் ரிங்கிட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி அமைச்சர் சொன்னார்.

அத்துடன் இரண்டாம் காலாண்டில் பொருளியல் வளர்ச்சி வலுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், வருமான வரி, மறைமுக வரி மூலம் மேலும் 10 பில்லியன் ரிங்கிட் கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

வருமானம் அதிகரித்தாலும் அரசாங்கம் அறிவித்துள்ள கொவிட்-19 உள்ளிட்ட பிற மானியங்களை ஈடுகட்ட அது போதாது என்றார் அவர்.

கொவிட்-19, விலைவாசி உயர்வைச் சமாளிக்க அரசாங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல மானியங்களை அறிவித்தது.