செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
6d4f0ae1-083c-456a-a937-55e266decacb
-

10 மில்லியன் டாலர் மதிப்புடைய நகைகள் கொள்ளை போயின

கலிஃபோர்னியா: அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் கவச வாகனம் ஒன்றில் இருந்து குறைந்தது 10 மில்லியன் டாலர் மதிப்புள்ள நகைகளும் ரத்தினக் கற்களும் கொள்ளையடிக்கப்பட்டன.

சான் ஃபிரான்சிஸ்கோவில் இடம்பெற்ற ஆபரணக் கண்காட்சியில் நகைகள் வைக்கப்பட்டிருந்தன. நகைகள் மீண்டும் கலிஃபோர்னியாவுக்கு கொண்டு செல்லப்பட்டன. வழியில், பாதுகாப்பு அதிகாரிகள் வாகனத்தை நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்த சமயத்தில், அதன் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

திருடர்கள் கவச வாகனத்தை இரவு முழுவதும் பின்தொடர்ந்து வந்தனரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று காவல் துறையினர் கூறினர்.

ர‌ஷ்யா மீதான சில தடைகளைத் தளர்த்த ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்

பிரசல்ஸ்: ஐரோப்பிய ஒன்றியம் வரும் புதன்கிழமையன்று ர‌ஷ்ய மீதான சில பொருளாதார தடைகளைத் தளர்த்தவுள்ளதாக வரைவு ஆவணம் ஒன்று காட்டுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

உணவு, உரங்கள் வர்த்தகத்தில் உள்ள இடர்பாடுகளைக் களையும் வகையில் முன்னணி ர‌ஷ்ய வங்கிகளின் முடக்கி வைக்கப்பட்ட நிதிகள் விடுவிக்கப்படுகின்றன. ரஷ்ய துறைமுகங்களில் இருந்தும் உணவு ஏற்றுமதியை எளிதாக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது.

பொருளாதாரத் தடைகள், வர்த்தகத்தில் ஏற்படுத்தியுள்ள எதிர்மறையான தாக்கம் குறித்து ஆப்பிரிக்க தலைவர்களின் விமர்சனங்களுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, கருங்கடலில் துறைமுகங்களை ர‌ஷ்யா முற்றுகையிட்டுள்ளதால் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறையை, பொருளாதார தடைகள் மேலும் மோசமடையச் செய்திருக்கலாம் என்று அவர்கள் கூறினர்.

அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

பெய்ஜிங்: அமெரிக்காவின் நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்குப் பயணம் மேற்கொண்டால், கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சீனா எச்சரித்துள்ளது. சென்ற ஏப்ரல் மாதமே திட்டமிடப்பட்டிருந்த இப்பயணம், பெலோசிக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதால் தள்ளிப்போனது.

இந்நிலையில், பெலோசி அடுத்த மாதம் தைவானுக்குச் செல்வார் என்று ஃபைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. இந்தப் பயணம் அமெரிக்கா-சீனா உறவைக் கடுமையாக பாதிக்கும் என்று ஏற்கெனவே பெய்ஜிங் எச்சரித்திருந்தது.

ராணுவப் படையினரைக் கொன்ற மியன்மார் கிளர்ச்சிப் படை

யங்கூன்: மியன்மார் ராணுவப் படையினர் 14 பேரைக் கடத்தியதாகவும் பலரைக் கொன்றதாகவும் ராணுவ ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிக் குழு சொன்னது.

இரு பிரிவினருக்கும் சண்டை நிறுத்த ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்ட நிலையில், அரக்கான் கிளர்ச்சி படை இதனைத் தெரிவித்துள்ளது.