ஜெனிவா: பருவநிலை மாற்றத்தின் காரணமாக வரும் ஆண்டுகளில் அனல்காற்று அடிக்கடி நிகழும் என்றும் அது மோசமானதாக இருக்கும் என்றும் ஐநாவின் உலக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
"பருவநிலை மாற்றத்தின் எதிர்மறை போக்கு 2060ஆம் ஆண்டு வரை நீடிக்கும்," என்றார் மையத்தின் தலைமை செயலாளர் பெட்டேரி தலாஸ்.
"அனல்காற்று சூழல் அடிக்கடி ஏற்படுகிறது. அதன் வெப்பநிலை தொடர்ந்து கடுமையாகி வருவதோடு, அதிக நாள்களுக்கு நீடிக்கிறது.
"வருங்காலங்களில் அனல்காற்று வழக்கமான ஒன்றாகிவிடும்," என்று அவர் சொன்னார்.
ஐரோப்பாவின் பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்தவாறே உள்ளது.
பிரிட்டனின் வரலாற்றிலேயே முதல்முறையாக நேற்று முன்தினம் வெப்பநிலை 40 டிகிரி செல்சியசைத் தாண்டியது.
அனல்காற்று காரணமாக உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்றும் உடல்நலக்குறைவால் அதிகமானோர் பாதிக்கப்படுவார்கள் என்றும், அது ஐரோப்பாவின் சுகாதார கட்டமைப்பின்மீது அழுத்தத்தை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்ப்பதாக மையம் சொன்னது.
சென்ற ஆண்டு இத்தாலியின் சிசிலி நகரில் 48.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. ஐரோப்பாவின் ஆக அதிக வெப்பநிலையாகும் அது. இந்த ஆண்டு வெப்பநிலை அதைவிட அதிகமாக இருக்கும் என்கிறது மையம்.
பிரான்சின் 64 பகுதிகளில் இதுவரையில்லாத அளவுக்கு அதிக வெப்பநிலை பதிவானது. பல நாடுகளில் இதுவரையில்லாத அளவுக்கு அதிகமான வெப்பநிலை பதிவாகும் என்று கூறப்படுகிறது.
அனல்காற்று காரணமாக ஐரோப்பாவின் பல பகுதிகளில் தீச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
அதிக வெப்பநிலையைச் சமாளிக்க உதவும் வகையில், பருவநிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு அரசாங்கங்கள் கொள்கைகளை வகுக்கவேண்டும் என்றது ஐநா.
அதிக வெப்பநிலை காரணமாக கடும் வறட்சி நிலவுகிறது. எனவே, உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
வெப்பநிலைக்கு ஏற்றவாறு, இங்கிலாந்தில் வசிக்கும் சிங்கப்பூரர்கள் தங்களின் அன்றாட வாழ்க்கைமுறையை மாற்றிக் கொண்டுள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தனர்.
இங்கிலாந்தில் வசிக்கும் சிங்கப்பூரின் தேசிய நெடுந்தொலைவு ஓட்ட வீராங்கனை சோ ருய் யோங், அனல்காற்றில் இருந்து தப்பிப்பதற் காக, தாம் வழக்கமாக மாலையில் மேற்கொள்ளும் ஓட்டப் பயிற்சியை அதிகாலை 5 மணிக்கு மேற்கொள்வதாக சொன்னார்.

