கார்கிவ்: உக்ரேனின் கட்டடங்கள், பொது இடங்களில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என உக்ரேன் கவலை தெரிவித்துள்ளது.
டோனட்ஸ் பகுதியில் உள்ள கிராமடோர்ஸ்க்கில் ரஷ்யப் படை ஏவுகணைத் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், சால்டிவ்ஸ்கி மாவட்டத்தில் நடத்திய தாக்குதலில் 13 வயது சிறுவன், ஓர் ஆண், பெண் ஆகிய மூன்று பேர் பலியாகினர்.
72 வயதுடைய பெண் ஒருவர் காயமடைந்ததாக கார்கிவ் பகுதி ராணுவ நிர்வாகத் தலைவர் ஓலே சினிஹுபோவ் டெலிகிராமில் தகவல் வெளியிட்டுள்ளார்.
குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும், நகரின் சாலைகளில் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தான் கைப்பற்றிய பகுதிகளை, கிரைமியாவைப் போல் தன்னுடன் இணைக்க ரஷ்யா திட்டமிடு வதாக அமெரிக்கா கூறுகிறது.

