70க்கும் மேற்பட்ட நாடுகளில் 14,000 பேர் பாதிப்பு; உலக அமைப்பு அவசர கூட்டம்
ஜெனிவா: உலகளவில் குரங்கம்மை தொற்று 70க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவிவிட்டது. ஏறக்குறைய 14,000 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில், உலகளவில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்த வேண்டுமா என்பது பற்றி முடிவு செய்ய உலக சுகாதார நிறுவனம் தன்னுடைய குரங்கம்மை வல்லுநர் குழுவைக் கூட்டுவதற்கு நேற்று உடனடி ஏற்பாடுகளைச் செய்தது.
குரங்கம்மை தொடர்பில் அந்த உலக அமைப்பு இதுவரை இரண்டு கூட்டங்களை நடத்தி இருக்கிறது.
சூழ்நிலை படுமோசமாகி வருகிறதா என்பதற்கான ஆதாரங்களை வல்லுநர்கள் பரிசோதிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
குரங்கம்மை, பொதுவாக மேற்கு, மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் நெடு நாட்களாகவே பிரச்சினை கொடுத்து வந்த தொற்றுநோயாக இருந்தது.
ஆனால் கடந்த மே மாதம் அது ஆப்பிரிக்க நாடுகளுக்கு வெளியே பல நாடுகளுக்கும் பரவியதாகத் தெரிவிக்கப்பட்டது.
குரங்கம்மை தொற்று உலகளவில் அபாய சங்கு ஊதும் அளவுக்கு மோசமான நிலையை எட்டி இருக்கிறதா என்பது பற்றி முடிவு செய்வதற்காக ஜூன் 23ஆம் தேதி இந்த அமைப்பு தனது வல்லுநர் குழுவைக் கூட்டியது.
ஆனால், அந்த அளவுக்குச் சூழ்நிலை இல்லை என்று அப்போது பெரும்பாலானவர்கள் பரிந்துரைத்தார்கள்.
அதையடுத்து இப்போது இரண்டாவது கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
தொற்று மோசமான அளவுக்கு இருக்கிறது என்று வல்லுநர் குழு பரிந்துரைத்தால் குரங்கம்மைப் பரவலைத் தடுக்க தற்காலிக நடவடிக்கைகளை அந்த உலக அமைப்பு பரிந்துரைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இருந்தாலும் கூட்டத்தின் முடிவு எப்போது வெளியாகும் என்பது பற்றிய தகவல் இல்லை.

