லண்டன்: பிரிட்டனின் புதிய பிரதமராக பொறுப்பு ஏற்க ஆளும் பழமைவாத கட்சியைச் சேர்ந்த இருவர் நீயா நானா போட்டியைத் தொடங்கி இருக்கிறார்கள்.
முன்னாள் நிதி அமைச்சரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ரிஷி சுனக் பழமைவாத கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேராதரவுடன் தொடக்கத்தில் இருந்தே முன்னணியில் இருக்கிறார்.
கட்சியின் 357 நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் அதாவது 137 பேரின் ஆதரவு ரிஷி சுனக்கிற்கு இருக்கிறது. பிரதமர் பதவிக்குப் போட்டியிட அவருக்கும் வெளியுறவு அமைச்சர் எலிசபெத் டிரஸுக்கும் கட்சி அங்கீகாரம் கொடுத்துள்ளது.
டிரஸை 113 உறுப்பினர்கள் ஆதரிக்கிறார்கள். இருவரில் கட்சி உறுப்பினர்களிடையே யாருக்கு அதிக ஆதரவு இருக்கிறதோ அவரே கட்சியின் தலைவராகவும் பிரதமராகவும் பதவி ஏற்பார்.
ஏறக்குறைய 160,000 பேர் கட்சியின் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்று மதிப்பிடப்படுகிறது. அவர்களின் ஆதரவைப் பொறுத்தே அடுத்த பிரதமர் முடிவு செய்யப்படு வார். முடிவு செப்டம்பர் 5ஆம் தேதி வெளிவரும்.
கட்சி அங்கீகாரத்தைப் பெற்றுவிட்ட இருவரும் தேசிய பிரசாரத்தைத் தொடங்கிவிட்டனர்.

