பெர்லின்: ரஷ்யாவில் இருந்து ஐரோப்பாவுக்கு குழாய் வழியாகச் செல்லும் இயற்கை எரிவாயு விநியோகம் நேற்று மீண்டும் தொடங்கியது.
இருந்தாலும் ஐரோப்பாவுக்கான ரஷ்யாவின் இயற்கை எரிவாயு விநியோகம் போதிய அளவுக்கு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த விநியோக எரிவாயுக் குழாய் அமைப்புகள் பராமரிப்புக்காக 10 நாள்களாக மூடப்பட்டு இருந்தன.
உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால் பதற்றம் அதிகமாகியது. ரஷ்யாவை ஐரோப்பிய நாடுகள் கண்டித்தன. அதற்கு பதிலடியாக ரஷ்யா இயற்கை எரிவாயு விநியோகத்தை நிறுத்திவிடுமென முக்கியமாக ஜெர்மனி அஞ்சியது.
ரஷ்ய எரிவாயுவை அதிகமாக சார்ந்திருக்கும் நாடு ஜெர்மனி. இந்த நிலையில், எரிவாயு விநியோகம் மீண்டும் தொடங்கி இருப்பதாக 'தி நார்ட் ஸ்ட்ரீம் 1' நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
இதனிடையே, ரஷ்யா மீது மேலும் தடைகளை விதிக்கும் முடிவை எடுப்பதில் ஐரோப்பிய ஒன்றியம் மேலும் முன்னேற்றம் கண்டு வருவதாக நேற்று தகவல்கள் வெளியாயின.
ரஷ்யாவின் தங்க இறக்குமதிக்குத் தடை விதிக்கவும் சில உயர் தொழில்நுட்பப் பொருட்களுக்கான ஏற்றுமதி கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கவும் வகை செய்யும் பல நடவடிக்கைகளுக்கு அந்த ஒன்றியத்தின் 27 தூதர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

