ஆக மூத்த ஆண் பாண்டா மரணம்
ஹாங்காங்: மனிதர்களால் வளர்க்கப்படும் பாண்டா கரடிகளிலேயே ஆக மூத்த 'அன் அன்' என்ற ஆண் கரடி 35வது வயதில் (மனிதன் 105 ஆண்டுகள் வாழ்வதற்குச் சமம்) நேற்று மரணமடைந்துவிட்டதாக ஓஷன் பார்க் என்ற ஹாங்காங் கருப்பொருள் பூங்கா அறிவித்தது.
'ஜியா ஜியா' என்ற பெயர்கொண்ட உலகின் ஆக மூத்த பெண் பாண்டா 2016ஆம் ஆண்டில் தனது 38வது வயதில் மாண்டது. இந்த இரண்டு கரடிகளையும் சீன அரசு ஹாங்காங்கிற்கு அன்பளிப்பாகக் கொடுத்து இருந்தது.
படகு மூழ்கி ஒன்பது பேர் மரணம்
ஜகார்த்தா: இந்தோனீசியாவின் டெர்னேட் என்ற தீவுக்கு அருகே 13 பேருடன் சென்ற படகு பருவநிலை காரணமாக மூழ்கியதாகவும் ஒன்பது சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் மீட்புப் பணி அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். அந்தச் சம்பவம் திங்கட்கிழமை நிகழ்ந்தது. இன்னமும் நால்வரைக் காணவில்லை என்று நேற்று தெரிவிக்கப்பட்டது.
ஐரோப்பாவில் கடும் வெப்பம்: 1,000 பேர் பலி; சமிக்ஞை விளக்குகள் உருகின
லண்டன்: இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுக்கல் உள்பட பல ஐரோப்பிய நாடுகளில் வெப்பத்தின் அளவு அதிகரித்துள்ளது. கடும் வெப்பம் காரணமாக பல இடங்களில் அனல்காற்று வீசி வருகிறது.
கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பம் 40 டிகிரி செல்சியஸுக்கும் மேலாக அதிகரித்துள்ளதன் காரணமாக இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல தீ விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன. லண்டனில் ரயில்வே சமிக்ஞை விளக்குகள் பொசுங்கி உருகிவிட்ட தாகத் தெரிவிக்கப்பட்டது. வெப்பம் தாங்காமல் மக்கள் கடற்கரைப் பகுதிகளில் குவிந்து வருவதாகவும் தகவல்கள் கூறின.

