பாகாங்: மலேசிய சூப்பர் லீக்கில் விளையாடும் ஸ்ரீ பாகாங் குழுவின் தொழில்நுட்ப ஆலோசகராக சிங்கப்பூரின் காற்பந்து சகாப்தம் ஃபாண்டி அகம்மது, 60, நியமிக்கப்பட்டுள்ளார் என்று நேற்று அந்தக் காற்பந்துச் சங்கம் அறிவித்தது.
திரு ஃபாண்டி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தில் தாம் வகித்த தேசிய இளையர் பிரிவின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகிய மூன்று வாரங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தில் அவரது பணி ஒப்பந்தம் ஜூன் 30ஆம் தேதியோடு முடிவடைந்தது.
"காற்பந்து விளையாட்டில் ஃபாண்டிக்கு இருக்கும் நிபுணத்து வமும் அனுபவமும் ஸ்ரீ பாகாங் குழுவுக்குப் பேருதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்," என்று அக்காற்பந்துச் சங்கம் தனது சமூக ஊடகத்தில் தெரிவித்தது.

