யங்கூன்: பொதுமக்களைக் கொன்றதாகவும் துன்புறுத்தியதாகவும் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் மியன்மார் ராணுவ வீரர்கள் பிபிசிக்கு அளித்த பேட்டியில் ஒப்புக்கொண்டுள்ளனர்.
அப்பாவி மக்களைக் கொல்லவும் அவர்களிடம் திருடவும் தங்களுக்கு உத்தரவிடப்பட்டதாக அவர்கள் கூறினர்.
"மக்களைப் பாதுகாப்பதற்காக ராணுவத்தில் சேர்ந்ததாக நினைத்தபோது, மக்களைக் கொல்ல உத்தரவிடப்பட்டது," என்று ராணுவ வீரர் ஒருவர் சொன்னார்.
சென்ற மே மாதம் மடாலயத்தில் இருந்தவர்களைக் கொன்ற ராணுவப் படையில் தாம் இருந்ததாக அவர் சொன்னார்.
ஆறு வீரர்கள் சாட்சியம் கூறியதாக பிபிசி சொன்னது.
ராணுவ ஆட்சியை எதிர்க்கும் கிராமங்களைச் சுற்றி கண்ணிவெடிகளைப் பதித்து, ராணுவ ஆட்சிக் குழு போர்க்குற்றங்களைச் செய்வதாக ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் கூறியது.
இதற்கிடையே, சிறுபான்மை முஸ்லிம் ரோஹிங்கியாக்கள் மீதான இனப்படுகொலை வழக்கில் மியன்மார் தெரிவித்துள்ள ஆட்சேபணை குறித்து உலக நீதிமன்றம் நேற்று தீர்ப்பளிக்கவிருந்தது.
இந்த வழக்கைத் தொடுத்த காம்பியாவிடம் அவ்வாறு சொல்வதற்கு முகாந்திரம் எதுவும் இல்லை என்று மியன்மார் ராணுவ ஆட்சிக் குழு சொன்னது.
பங்ளாதேஷில் தஞ்சம் புகுந்திருந்த ரோஹிங்கியாக்களைக் கண்ட காம்பியா அதிகாரி, 57 நாடுகளின் ஆதரவுடன் மியன்மார் அரசாங்கத்திற்கு எதிராக இனப்படுகொலை வழக்கு தொடுத்தார்.

