செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
1ad98fcb-71eb-457d-b2ed-106a93ad8739
-

'ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க டிரம்ப் நடவடிக்கை எடுக்கவில்லை'

வா‌ஷிங்டன்: தமது ஆதரவாளர்கள் நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டபோது, அப்போதைய அதிபர் டிரம்ப் அதை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை என்று விசாரணைக் குழுவிடம் முன்னாள் அதிகாரிகள் சாட்சியம் அளித்துள்ளனர்.

அந்த கலவரத்தை அவர் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்ததாகவும் அவர்கள் கூறினர். தேசியப் பாதுகாப்புக்கான முன்னாள் துணை ஆலோசகர் மேத்யூ போட்டிங்கரும் முன்னாள் பத்திரிகைச் செயலாளர் சாரா மேத்யூசும் இதுகுறித்து சாட்சியம் அளித்தனர்.

அமலாக்க அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், துணை அதிபர் ஆகியோரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தபோதும் டிரம்ப் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தேர்தலில் டிரம்பிற்கு ஏற்பட்ட தோல்வியை உறுதி செய்யும் கூட்டத்தைக் கலைக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் அப்போது முயன்றனர்.

நியூசிலாந்தில் கிருமித்தொற்று காரணமாக ஏற்படும் மரணம் அதிகரிப்பு

வெலிங்டன்: நியூசிலாந்தில் கிருமித்தொற்று காரணமாக உயிரிழப்போர் விகிதம் இதுவரையில்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, மூத்தோர் உயிரிழப்பது அதிகமாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

ஜூலை 16ஆம் தேதி நிலவரப்படி, அதற்கு முந்திய ஏழு நாள்களில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 151ஐ எட்டியது. நேற்று ஒரே நாளில் 26 பேர் தொற்று காரணமாக மாண்டுவிட்டனர். மாண்ட அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று சுகாதார அமைச்சு சொன்னது.

உலகம் முழுவதும் கொள்ளைநோய் தலைவிரித்தாடியபோது, அதை திறம்பட சமாளித்து, தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கையையும் உயிரிழப்பையும் நியூசிலாந்து கட்டுக்குள் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த மக்களை ஈர்க்கும் ஜெர்மனியின் திட்டம்

பெர்லின்: பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் போன்ற ஆடம்பர கார்கள் தயாரிக்கப்படும் ஜெர்மனியில் பொதுமக்களைப் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த ஈர்க்கும் திட்டத்திற்குப் பலன் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

9 யூரோவிற்கு (12.70 வெள்ளி) மாதாந்திர டிக்கெட் வாங்கினால் போதும், அந்த மாதம் முழுவதும் பொதுப் போக்குவரத்தில் எங்கு வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் போய் வரலாம் என்ற திட்டத்தை சென்ற மாதம் தொடங்கியது ஜெர்மனி. விலைவாசி உயர்வு, வாகனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கரியமில வாயு ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட இச்சலுகை ஆகஸ்ட் மாதம் வரை தொடரும். இதற்குப் பலன் இருக்கிறது என்றாலும் அதை இப்போதே உறுதியாக கூறமுடியாது என்று இதை ஆராயும் டாம்டாம் நிறுவனம் சொன்னது.

அமெரிக்காவில் இளம்பிள்ளைவாதம்

நியூயார்க்: அமெரிக்காவில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு, இளம்பிள்ளைவாதம் கண்டறியப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர் நியூயார்க் சிட்டியின் ராக்லேண்ட் கவுண்டியில் வசிப்பதாகவும் அமெரிக்காவிற்கு வெளியே இருந்து அவருக்குக் கிருமி பரவியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

1979ஆம் ஆண்டிற்குப் பிறகு அமெரிக்காவில் இளம்பிள்ளைவாத கிருமி உருவானது கிடையாது. இருப்பினும் வெளிநாடுகளில் இருந்து வருவோரால் பாதிப்பு ஏற்பட்டது. அந்த வகையில் அமெரிக்காவில் கடைசியாக 1993ஆம் ஆண்டு இளம்பிள்ளைவாத பாதிப்பு ஏற்பட்டது.