தோக்கியோ: உக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பின் விளைவுகள், தைவான்மீது சீனா படையெடுப்பதற்கான அச்சுறுத்தல், தொழில்நுட்ப விநியோகச் சங்கிலிகள் உள்ளிட்ட தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதாக ஜப்பான் நேற்று எச்சரித்தது.
ராணுவத்திற்கு முன்னெப்போதையும்விட அதிக நிதி ஒதுக்கீடு செய்ய திட்டமிட்டுள்ள ஜப்பான், பாதுகாப்பு குறித்த அரசாங்கத்தின் கவலைகளை 500 பக்க அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
அதில், உலகளாவிய பாதுகாப்பு, ஜப்பான் எதிர்நோக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் என இரண்டையும் பற்றி கூறப்பட்டுள்ளது.
"நாடுகளுக்கு இடையிலான அரசியல், பொருளியல், ராணுவ போட்டிகள் தெளிவாக உள்ளன.
"படைபலத்தால் கட்டாயப்படுத்தி ஒருதலைபட்சமாக முடிவு எடுக்கப்படுவதைக் காட்டும் வகையிலான உக்ரேன்-ரஷ்யா போர் ஆபத்தானது," என்றது அந்த வெள்ளை அறிக்கை.
இந்த படையெடுப்பு, 'அனைத்துலகச் சட்டத்தைக் கடுமையாக மீறிய செயல்' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தைவானைத் தனது ஒருபகுதியாக கருதும் சீனா, படைபலத்தைப் பயன்படுத்தி, அதை தம்முடன் இணைக்க வேண்டும் என்று நினைக்கும் நிலையில் ரஷ்யாவின் படையெடுப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.
உலக நாடுகளால் தனிமைப்படுத்தப்படும் ரஷ்யா, சீனாவுடனான தனது உறவைப் பலப்படுத்தக்கூடும் என்றும் அறிக்கையில் கவலை தெரிவிக்கப்பட்டது.
சென்ற மே மாதம் சீனாவும் ரஷ்யாவும் ஜப்பானுக்கு அருகில் கூட்டு விமானப் படை பயிற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
தனது வட்டாரத்தைச் சுற்றி ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜப்பானின் இந்த அறிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா, தனது உள்நாட்டுப் பிரச்சினைகளில் தலையிடுவதாகவும் சாடியது.
"ராணுவ பலத்தை அதிகரிப்பதற்கு, சாக்குப்போக்கு தேடும் நோக்கில், தம்முடைய வட்டாரத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவுவதாக கூறுவதை ஜப்பான் நிறுத்திக் கொள்ளவேண்டும்," என்று சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் சொன்னார்.

