பனிக்கரடியின் நாவில் சிக்கிய தகர டப்பா அகற்றப்பட்டது
மாஸ்கோ: இரண்டு வயது பெண் பனிக்கரடியின் (படம்) நாவில் சிக்கியிருந்த பால் 'கேன்' எனும் தகர டப்பாவை அகற்றி மாஸ்கோ மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.
சாப்பிடமுடியாமல் தவித்த அந்த பனிக்கரடி, வடக்கு ரஷ்யாவின் டிக்சன் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் சுற்றி திரிந்தது. அதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தனர்.
உடனடியாக அங்கு சென்ற மாஸ்கோ விலங்கியல் தோட்டக் குழுவினர், பனிக்கரடியின் நாக்கில் சிக்கிக் கொண்ட தகர டப்பாவை அகற்றி, அதற்கு சிகிச்சை அளித்தனர். பனிக்கரடி சில நாள்களாக உணவு, தண்ணீர் எதுவும் சாப்பிடவில்லை. எனவே, அது மெலிந்த தேகத்துடனும் சோர்வாகவும் காணப்பட்டது என்று விலங்கு மருத்துவர் சொன்னார்.
மியன்மார் இனப்படுகொலை வழக்கு விசாரணைக்கு ஒப்புதல்
யங்கூன்: மியன்மார் இனப்படுகொலைக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் மியன்மார் தெரிவித்த ஆட்சேபணைகளை அனைத்துலக நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து, இந்த வழக்கு முழுமையாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்துவதற்கு முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றம் சொன்னது. நீதிமன்றத்தின் இந்த முடிவை, பர்மா ரோஹிங்கியா மக்கள் சங்கம் வரவேற்றுள்ளது. அகதிகள் முகாமில் இருந்த ரோஹிங்கியா இன மக்களின் துயரங்களைக் கண்ட காம்பியா அதிகாரிகள் குழு, மற்ற நாடுகளின் ஆதரவுடன் மியன்மார்மீது இனப்படுகொலை வழக்கைத் தொடர்ந்தது.
நச்சுக்கழிவை ஏற்றி வந்த மாலுமிக்கு ஏழு ஆண்டு சிறை
ஜகார்த்தா: கப்பலில் நச்சுக்கழிவுகளை ஏற்றி வந்ததற்காக அதன் இந்தோனீசிய மாலுமிக்கு ஏழு ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது பாத்தாம் நீதிமன்றம்.
பிலைஸ் கொடி பறந்த அக்கப்பல், கரமாயில் சிங்கப்பூர் லிமிடெட் என்ற நிறுவனத்திற்குச் சொந்தமானது என்றும் அது நச்சுக்கழிவுகள் சேகரிக்கும் நிறுவனம் என்றும் இந்தோனீசிய அரசாங்கம் சொன்னது.
சென்ற ஆண்டு ஜூன் 13ஆம் தேதி, பாத்தாம் துறைமுக ஆணையத்துக்குத் துப்புக் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள், இரண்டு நாள்களுக்குப் பிறகு நச்சுக்கழிவுகள் அடங்கிய
20 கொள்கலன்களைக் கண்டனர்.
இதையடுத்து, சுற்றுச்சூழல், கப்பல் ஏற்றுமதி சட்டங்களை மீறியதற்காக கப்பலின் மாலுமிக்கு ஏழு ஆண்டு சிறைத் தண்டனையும் ஐந்து பில்லியன் ருப்பியா (463,000 வெள்ளி) அபராதமும் விதிக்கப்பட்டது.
கழிவுகள் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக இந்தோனீசியா சொன்னது.

