கியவ்: உக்ரேனின் துறைமுக நகரமான ஒடேசாமீது ரஷ்யா மீண்டும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக உக்ரேன் ராணுவம் கூறியுள்ளது.
கருங்கடல் துறைமுகத்தில் இருந்து தானிய ஏற்றுமதியைத் தொடங்குவதற்கு ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தான சில மணி நேரங்களிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
'காலிபர்' எனும் கப்பலில் இருந்து வீசப்படும் ஏவுகணைகள் மூலம் ஒடேசா துறைமுக உள்கட்டமைப்பை ரஷ்யா தாக்கியது. நான்கு ஏவுகணைகள் வீசப்பட்டன," என்றார் தெற்குப் பகுதி அதிகாரி ஒருவர்.
இஸ்தான்புல் நாட்டில், ஐநாவுக்கும் துருக்கிக்கும் ரஷ்யா அளித்த உறுதிகளை, இந்தத் தாக்குதல்கள் கேள்விக்குறியாக்கியுள்ளது என்று உக்ரேனிய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் சொன்னார்.
தானிய ஏற்றுமதிக்கான பாதுகாப்பு பாதை ஒப்பந்தத்தின்கீழ் தான் அளித்த உறுதிகளை ரஷ்யா நிறைவேற்றுவதை உறுதி செய்யுமாறு ஐநாவுக்கும் துருக்கிக்கும் உக்ரேன் அழைப்பு விடுத்துள்ளது.
இத்தாக்குதல் குறித்து ரஷ்யாவிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை.
மத்திய உக்ரேனின் கிரோவோஹ்ராட் பகுதியில் நடந்த மற்றோர் ஏவுகணைத் தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். ராணுவ விமானத் தளம், ரயில்வே உள்கட்டமைப்பைக் குறிவைத்து 13 ரஷ்ய ஏவுகணைகள் வீசப்பட்டதாக உள்ளூர் ஆளுநர் தெரிவித்தார்.
இதற்கிடையே, உக்ரேனுக்கு மேலும் 270 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிவழங்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

