லாஸ் ஏஞ்சலிஸ்: காட்டுத் தீ வேகமாகப் பரவி வரும் கலிஃபோர்னியாவின் மரியபோசா கவுண்டியில் அவசரநிலை அறிவிக்கப்பட்டு உள்ளது.
யோசிமைட் தேசிய பூங்காவிற்கு அருகில் வெள்ளிக்கிழமையன்று இந்தக் காட்டுத் தீ பரவத் தொடங்கியது.
கிட்டத்தட்ட 600 ஏக்கர் நிலப்பரப்பில் எரிந்து கொண்டிருந்த காட்டுத் தீ, 24 மணி நேரத்தில் 9,500 ஏக்கர் வரை பரவியதாகத் தீயணைப்புத் துறை சொன்னது.
தீயைக் கட்டுக்குள் கொண்டு வர கிட்டத்தட்ட 400 தீயணைப்பாளர்கள் பல மணி நேரமாகப் போராடி வருகின்றனர். இப்பணியில் நான்கு ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
காட்டுத்தீ பரவல் தீவிரமாக உள்ளதாகக் கூறிய தீயணைப்புத் துறை, அதனைக் கட்டுக்குள் கொண்டுவர கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகும் என்றது.
பத்து வீடுகள் எரிந்து சாம்பலாயின. ஐந்து கட்டடங்கள் சேதமடைந்தன. மேலும், ஆயிரக்கணக்கான கட்டடங்கள் அழியக்கூடும் என்றும் தீயணைப்பாளர்கள் கருதுகின்ற னர்.
6,000த்திற்கும் அதிகமானவர்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தீவிரமடைந்துள்ள காட்டுத் தீ காரணமாக, அப்பகுதி சாம்பலால் மூடப்பட்டுள்ளது.
காட்டுத் தீ காரணமாக, வானுயர பரவிய கரும்புகையைக் காட்டும் படங்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றன.
அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் அனல்காற்று தீவிரமடைந்துள்ள நிலையில், காட்டுத் தீச்சம்பவங்கள் மேலும் அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

