நிலக்கரி சுரங்க சரிவு;
சீனாவில் 10 பேர் மரணம்
பெய்ஜிங்: சீனாவில் நிலக்கரி சுரங்கத்தின் ஒரு பகுதி சரிந்ததில், அதனுள் இருந்த 10 பேர் மாண்டுவிட்டனர். ஏழு பேர் காயமடைந்தனர்.
வடகிழக்கு சீனாவின் கன்சு மாநிலத்தில் நடந்த இச்சம்பவத்திற்கான மீட்புப் பணி முடிந்துவிட்டதாகத் தொலைக்காட்சி செய்தியில் கூறப்பட்டது.விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறினர்.
நிதி தேவைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டது: பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்: நடப்பு நிதியாண்டில் வெளிநாட்டு செலவினங்களுக்குத் தேவையான நிதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டதாக பாகிஸ்தானின் மத்திய வங்கித் தலைவர் கூறியுள்ளார். நாட்டின் நிதிநிலைமை குறித்து சந்தையில் நிலவும் கவலைகள் ஒரு வாரத்தில் மறைந்துவிடும் என்றும் அவர் சொன்னார்.
அனைத்துலகப் பண நிதியத்தின் ஆதரவுடன் நிதித் தேவைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் அது சொன்னது. இதற்காக 1.17 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி வழங்குவதற்கான புதிய ஒப்பந்தம் ஒன்று நிதியத்துடன் எட்டப்பட்டுள்ளது.
சென்ற வாரம் அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தானின் நாணய மதிப்பு எட்டு விழுக்காடு சரிவு கண்டது. நாட்டின் பணவீக்கத்துடன் விலைவாசியும் பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்தது.
எனவே, இலங்கையைப் போன்றதொரு நிலை பாகிஸ்தானிற்கும் ஏற்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
இலங்கை அதிபர் மாளிகையில் 1,000 கலைப்பொருள்கள் திருட்டு
அதிபர் மாளிகையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினர். படம்: இபிஏ
கொழும்பு: இலங்கையின் முன்னாள் அதிபரும் பிரதமரும் பதவி விலகக் கோரி சில மாதங்களாக அங்கு போராட்டங்கள் நடந்து வந்தன. அதன் உச்சகட்டமாக இம்மாதம் 9ஆம் தேதி பொதுமக்கள் அதிபர் மாளிகை, பிரதமர் இல்லத்திற்குள் நுழைந்தனர்.
ரணில் விக்ரமசிங்க புதிய அதிபராக பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அதிபர் மாளிகைக்குள் தங்கியிருந்தவர்கள் நேற்று முன்தினம் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள அதிபர் மாளிகை இன்று மீண்டும் திறக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கை அதிபர் மாளிகை, பிரதமர் இல்லத்தில் இருந்த 1,000க்கும் மேற்பட்ட கலைப் பொருள்கள் திருடப்பட்டதாக காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கலைப் பொருள்களின் ஆவணப் பதிவு இல்லாததால், காணாமற்போன பொருள்களின் எண்ணிக்கையைச் சரியாகக் கணக்கிடமுடியவில்லை.

