நோம் பென்: குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டவுடன் தாய்லாந்தில் இருந்து தப்பியோடிய நைஜீரிய ஆடவர், கம்போடியாவில் கண்டுபிடிக்கப்பட்டார்.
அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கம்போடிய சுகாதார அமைச்சு சொன்னது.
விசா காலம் முடிந்த பிறகும் தாய்லாந்தில் தங்கியிருந்த அந்த 27 வயது ஆடவருக்கு, சென்ற திங்கட்கிழமை குரங்கம்மை உறுதி செய்யப்பட்டது.
தொற்று உறுதி செய்யப்பட்டவுடன் தமது கைபேசியை அணைத்து விட்டு, அவர் தப்பியோடிவிட்டார்.
புக்கெட் நகரில் தங்கியிருந்த அவர் இரண்டு பொழுபோக்குக் கூடங்களுக்குச் சென்றிருந்தார். இதனையடுத்து 142 பேருக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. காவல்துறையினரும் அதிகாரிகளும் அவரைத் தேடும் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், சனிக்கிழமையன்று அவரின் கைபேசி சமிக்ஞை கம்போடியாவில் இருப்பதைக் காட்டியது.
குறிப்பிட்ட இடத்திற்குச் சென்ற கம்போடிய காவல்துறையினர், அவரைப் பிடித்து மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அந்த ஆடவருடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளுமாறு கம்போடிய சுகாதார அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது.

