யங்கோன்: மியன்மார் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சிலருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.
பயங்கரவாதச் செயல்களை மேற்கொள்ள துணை போனதாகச் சொல்லி நான்கு ஜனநாயகக் கிளர்ச்சியாளர்களுக்கு மியன்மார் மரண தண்டனை விதித்திருந்தது. இப்போது தண்டனை நிறைவேற்றப்பட்டது பல தரப்பினரிடையே பெரும் கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.
மியன்மார் ராணுவத்தை எதிர்த்து சண்டையிட அரசாங்க எதிர்ப்புப் படைகளுக்கு உதவியதாக மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு கிளர்ச்சியாளர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. மியன்மாரின் ராணுவம் சென்ற ஆண்டு அந்நாட்டில் வலுக்கட்டாயமாக ஆட்சியைக் கைப்பற்றியது.
ஜிமி என்றழைக்கப்படும் மியன்மாரின் ஜனநாயகப் போராளி கியாவ் மின் யு, இசைக் கலைஞரும் முன்னாள் அரசியல்வாதியுமான ஃபியோ ஸெயா தாவ் ஆகியோர் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டோரில் அடங்குவர். 53 வயது கியாவ் மின் யுவும் 41 வயது ஸெயா தாவும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்தனர்.
அந்த முயற்சியில் இருவரும் தோல்வியடைந்தனர். ஹ்லா மியோ ஆவ்ங், துரா ஸாவ் ஆகியோர் மரண தண்டனை விதிக்கப்பட்ட இதர இருவர்.
நால்வரின் வழக்கு விசாரணை கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை ரகசியமாக நடைபெற்றது.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை மியன்மார் அரசாங்கத்திற்குச் சொந்தமான ஊடகம் நேற்று தெரிவித்தது. ராணுவ அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவரும் பின்னர் அதை உறுதிப்படுத்தினார்.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நேரம் தெரிவிக்கப்படவில்லை.
இதற்கு முன்பு மியன்மாரின் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் தூக்கிலிடப்பட்டனர்.

