வாஷிங்டன்: அமெரிக்காவின் நாடாளுமன்ற நாயகர் நான்சி பெலோசி, தைவானுக்குப் பயணம் மேற்கொள்ளக்கூடும் என்ற பேச்சு, வெளியுறவுக் கொள்கையிலும் பாதுகாப்பிலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
நான்சி பெலோசி தைவானுக்குச் செல்வது குறித்து உறுதியான தகவல்கள் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், பல வெளிநாட்டுக் கொள்கை ஆய்வாளர்கள் பலர், நான்சியின் பயணம் தேவையில்லாமல் சீனாவைச் சீண்டும் செயல் என்று கருதுகின்றனர்.
வெள்ளை மாளிகையும் அமெரிக்க ராணுவமும் இதையே எண்ணுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தற்காப்புத் துறை பெலோசியிடம் விவரித்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளர் நியூட் கின்ரிச், டிரம்பின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகரான ஜான் போல்டன் ஆகிய இருவரும் பெலோசி, தைவானுக்குச் செல்லவேண்டும் என்று கூறுகின்றனர்.
"பெலோசி கண்டிப்பாக தைவானுக்குச் செல்லவேண்டும். அவருடன் இருகட்சிக் குழு செல்லவேண்டும்," என்றார் கின்ரிச்.
"தைவான் குறித்த சீனாவின் நிலைப்பாடு, அமெரிக்கா-தைவான் இடையிலான அரசதந்திர உறவில் ஆதிக்கம் செலுத்துகிறது.
"அமெரிக்காவில் பலர், சீனாவுடனான உறவு பலவீனமாவதைப் பற்றி கவலைப்படுகிறார்கள்.
"ஒரு சிலர் மட்டும்தான் அமெரிக்கா-தைவான் உறவு குறித்து கவலைப்படுகிறார்கள்," என்றார் ஜான் போல்டன்.
குடியரசுக் கட்சியின் உறுப்பினர் பென் சாஸ், "பெலோசி தைவானுக்குச் செல்ல வேண்டும். இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஸி ஸின்பிங்கிடம் தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறினார்.
சீனாவின் அச்சுறுத்தலை எதிர்நோக்கியிருக்கும் தைவான் மக்களை பெலோசி சந்திக்கவேண்டும் என்றார் அவர்.
தைவானை, தமது நாட்டின் ஒரு பகுதி எனும் சீனா, படைப்பலத்தைக் கொண்டு அதனைத் தன்னுடன் இணைக்கத் தயாராக உள்ளது.
எனவே, பெலோசி தைவானுக்குப் பயணம் மேற்கொண்டால், அதன் விளைவுகளை அமெரிக்கா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று சீனா எச்சரித்துள்ளது.

