நோம் பென்: மியன்மாரில் நான்கு ஆர்வலர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது ஏமாற்றமளிப்பதோடு, ஆசியான் நாடுகள் அதைக் கண்டிப்பதாகவும் ஆசியான் நாடுகளுக்குத் தலைமை தாங்கும் கம்போடியா கூறியுள்ளது.
மரண தண்டனையை நிறைவேற்றுவது பற்றி மறுபரிசீலனை செய்யுமாறு கம்போடியா பிரதமர் ஹுன் சென் மேல்முறையீடு செய்திருந்தபோதும், மியன்மார் ராணுவ ஆட்சிக் குழு அவர்களின் மரண தண்டனையை நிறைவேற்றியது.
அமைதியைக் கொண்டு வருவதற்கான ஆசியான் நாடுகளின் முயற்சிகளுக்கு ஒத்துழைக்க விருப்பமில்லாததை இது காட்டுவதாக உள்ளது என்றார் அவர்.
கடந்த பத்து ஆண்டுகளில் அங்கு நிறைவேற்றப்பட்ட இந்த முதல் மரண தண்டனைக்குப் பரவலாக கண்டனம் எழுந்தது.
இதுகுறித்து கம்போடியா வெளியிட்டுள்ள அறிக்கையில், "மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது மிகவும் கவலையாகவும் வருத்தமளிப்பதாகவும் உள்ளது.
"இது, மியன்மார் மட்டுமல்லாமல், வட்டாரத்தின் அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மைக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும்," என்று கூறப்பட்டிருந்தது.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மலேசியா, மியன்மாரின் இந்த நடவடிக்கையை மனிதநேயத்திற்கு எதிரான குற்றமாக பார்ப்பதாக சொன்னது.
ஆட்சிக் கவிழ்ப்பிற்குப் பிறகு, மியன்மாரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களுக்கு உதவியதாக நான்கு பேர் சென்ற திங்கள்கிழமை தூக்கிலிடப்பட்டனர்.
ஜனநாயக ஆர்வலரான ஜிம்மி எனும் 53 வயது கியாவ் மின் யூ, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆங் சான் சூச்சிக்கு நெருக்கமானவரான 41 வயது ஃபியோ சீயா தாவ் ஆகியோரும் அவர்களில் அடங்குவர்.
மியன்மாரின் இரண்டு முக்கிய ஜனநாயக ஆர்வலர்களைத் தூக்கிலிட்டது, ஜனநாயக ஆதரவு குரல் தொடர்ந்து மேலோங்கச் செய்யும் என்று அவர்களின் குடும்பத்தினர் கூறினர்.
ஆனால், சட்டத்திற்கு உட்பட்டு, மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக மியன்மார் ராணுவ ஆட்சிக் குழு பதிலளித்துள்ளது.

