இளையர்களிடையே புகைப்பிடிக்கும் பழக்கத்தைத் தடுக்க புகையிலை பொருள்களுக்கு எதிரான மசோதாவை மலேசிய நாடாளுமன்றத்தில் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதின் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், 2007ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு பிறந்தவர்கள் 18 வயதுக்குப் பிறகும் புகைப்பிடிக்கமுடியாது.
சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை அவர்கள் வாங்கவோ, வைத்திருக்கவோ முடியாது.
கடைக்காரர்கள் அவர்களுக்குப் புகையிலை பொருள்களை விற்கமுடியாது.
மசோதாவின்படி முதலில் 2005ஆம் ஆண்டிற்குப் பிறகு பிறந்தவர்கள் புகைப்பிடிக்கமுடியாது என்றிருந்தது.
ஆனால், பல்வேறு தரப்பினரின் கருத்துகளைக் கேட்டறிந்த பிறகு, அது மேலும் இரண்டு ஆண்டுகள் குறைக்கப்பட்டது.
"புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, பல உயிர்களைக் காப்பாற்ற இது உதவும்," என்று கைரி டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
புகைப்பழக்கம் காரணமாக மலேசியாவில் வாரத்திற்கு 400 பேர் மரணமடைவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
2009ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள் புகையிலை பொருள்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்கான இதேபோன்ற மசோதா நியூசிலாந்திலும் தாக்கல் செய்யப்பட்டது.

