கோலாலம்பூர்: மலேசியாவில் இளையர்களிடையே புகை பிடிக்கும் பழக்கத்தைத் தடுக்கும் வகையில், புகையிலைப் பொருள்களுக்கு எதிரான மசோதாவை மலேசிய நாடாளுமன்றத்தில் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதின் நேற்று தாக்கல் செய்தார்.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், 2007ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு, பிறந்தவர்கள் 18 வயதுக்குப் பிறகும் புகை
பிடிக்க முடியாது. சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை அவர்கள் வாங்கவோ, வைத்திருக்கவோ முடியாது.
கடைக்காரர்கள் அவர்களுக்குப் புகையிலைப் பொருள்களை விற்கமுடியாது.
இந்த மசோதாவின்படி முதலில் 2005ஆம் ஆண்டிற்குப் பிறகு பிறந்தவர்கள் புகை பிடிக்க முடியாது என்றிருந்தது. ஆனால், பல்வேறு தரப்பினரின் கருத்துகளைக் கேட்டறிந்த பிறகு, அதை மேலும் இரண்டு ஆண்டுகள் குறைக்கப்பட்டது.
"புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, பல உயிர்களைக் காப்பாற்ற இது உதவும்," என்று கைரி டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
புகை பழக்கம் காரணமாக மலேசியாவில் வாரத்திற்கு 400 பேர் மாண்டுபோவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
2009ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள் புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்கான இதேபோன்ற மசோதா நியூசிலாந்திலும் கொண்டு வரப்பட்டுள்ளது.

