செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
ea1df3e5-9f9c-4623-b5b0-0fd7de2b4d0d
-

அமெரிக்காவில் கொட்டித் தீர்த்த மழை; ஒரே இரவில் ஆறுகளான சாலைகள்

நியூயார்க்: அமெரிக்காவின் செயிண்ட் லூயில் நகரிலும் மிசூரி நகரின் மற்ற பகுதிகளிலும் கொட்டித் தீர்த்த மழையால், அதன் சாலைகளில் வெள்ளநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. 30 செ.மீட்டர் மழை பதிவானதாக வானிலை மையம் சொன்னது. லூயிஸ் நகரில் 24 மணி நேரத்தில் 22 செ.மீட்டர் மழை பதிவானது. 1915ஆம் ஆண்டில் பெய்த 18 செ.மீட்டர் மழைக்குப் பிறகு, இப்போதுதான் அதிகளவு மழை பதிவாகியுள்ளது.

தாழ்வான பகுதிகளில் பல கார்கள் முற்றாக நீரில் மூழ்கிவிட்டதாக மீட்புக் குழுவினர் கூறினர். நீரில் மூழ்கிய காரில் ஒருவர் இறந்துகிடந்ததாகவும் அவர்கள் கூறினர். படம்: நியூயார்க் டைம்ஸ்

'முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படாது'

கோலாலம்பூர்: சொந்த கட்சியில் இருந்து அழுத்தம் இருந்தாலும், மலேசியத் தேர்தலை முன்கூட்டியே நடத்த தாம் அவசரப்படவில்லை என்று கூறியுள்ளார் மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்.

பிரதமருக்கும் எதிர்க்கட்சியான பக்கத்தான் ஹரப்பானுக்கும் இடையிலான ஒத்துழைப்பு ஒப்பந்தம் வரும் ஞாயிற்றுக்கிழமையோடு முடிவடையவுள்ள நிலையில், தேர்தலை முன்கூட்டியே நடத்த அம்னோ அழுத்தம் கொடுக்கிறது.

இந்த ஒப்பந்தம் முடிவடைந்தாலும் சட்டத் திருத்தங்களைக் கொண்டுவர தமது அரசாங்கம் தொடர்ந்து செயல்படும் என்றும் அவர் சொன்னார். மலேசிய பொதுத் தேர்தலுக்கு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவகாசம் உள்ளது.

ஜப்பானில் மக்களைக் காயப்படுத்திய குரங்கு கொல்லப்பட்டது

தோக்கியோ: ஜப்பானில் கடந்த மூன்று வாரங்களாக மக்களை குரங்கு கும்பல் ஒன்று அச்சுறுத்தி வந்தது. அந்தக் கும்பலைச் சேர்ந்த குரங்கு ஒன்று கொல்லப்பட்டு விட்டதாக அதிகாரிகள் நேற்று கூறினர்.

இந்த குரங்கு கும்பலின் சேட்டையால் யமகுச்சி நகரில் கிட்டத்தட்ட 50 பேர் காயமடைந்தனர். அந்தக் குரங்குகள்.மக்களைப் பிராண்டியும் கடித்தும் காயப்படுத்தின.

செவ்வாய்க்கிழமையன்று பள்ளிக்கூட வளாகத்தில் சுற்றித் திரிந்த கும்பலைச் சேர்ந்த குரங்கை, வேட்டைக்காரர்கள் பிடித்தனர். மற்ற குரங்குகளைத் தேடும் வேட்டை தொடர்வதாக அதிகாரி ஒருவர் சொன்னார்.