பழங்குடியினரிடம் மன்னிப்பு கேட்ட போப் ஆண்டவர்

2 mins read
c964c9a7-90f7-4aea-ade9-c6f24cb74463
-
multi-img1 of 2

உலக கத்தோலிக்க சமயத்தினரின் தலைவரான போப் ஆண்டவர் அங்குள்ள பழங்குடியினருக்கு நடத்தப்பட்ட கொடுமைகளுக்காக மன்னிப்பு கோரியுள்ளார்.

போப் பிரான்சிஸ் தற்போதைய போப் ஆண்டவராகப் பதவி வகிக்கிறார். அவர் கனடா நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அங்கு 19ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்க திருச்சபைகளால் நடத்தப்பட்ட உறைவிட பள்ளிகளில் தங்கிப்படித்து வந்த பழங்குடியின மாணவர்கள், உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டது குறித்து அவர் தனது வேதனையை வெளிப்படுத்தி மன்னிப்பும் கோரினார்.

அவர் செவ்விந்திய பழங்குடியினரிடம் மனதார மன்னிப்பு கேட்டுக்கொண்டார். கனடாவில் அல்பெர்டா மாநிலத்தில் உள்ள மாஸ்க்வாசிஸ் நகரத்தில் 19ஆம் நூற்றாண்டில் தேவாலய பள்ளியாக விளங்கிய எர்மெனிஸ்கின் உறைவிட பள்ளிக்கு சென்றிருந்தபோதுதான், போப் ஆண்டவர் இந்த மன்னிப்பை கேட்டார்.

அதைத் தொடர்ந்து அங்கு அவருக்கு ஒரு மாறுபட்ட அனுபவம் காத்திருந்தது. அங்கு அவருக்கு பழங்குடியின மக்களின் பாரம்பரிய கிரீடத்தை அணிவித்தனர்.

அக்காலத்தில் கத்தோலிக்க திருச்சபை உறைவிட பள்ளியில் துன்புறுத்தல்களுக்கு இடையே உயிர் தப்பிய சீப் வில்டன் லிட்டில்சைல்ட் என்பவர் அந்த கிரீடத்தை போப் ஆண்டவருக்கு அணிவித்தபோது அங்கிருந்த பழங்குடியின மக்கள் அனைவரும் கைதட்டி ஆர்ப்பரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அப்போது தமக்கு பாரம்பரிய கிரீடம் அணிவித்தவரின் கைகளில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் முத்தமிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அந்தக் கிரீடம், பூர்வீக அமெரிக்க படைத்தளபதிகள், போர் வீரர்கள் அணியும் மரியாதையின் சின்னமாக விளங்கியது, வரலாற்றுச்சிறப்பு மிக்கது என்பது குறிப்பிடத்தக்கது.