சிங்கப்பூர்: போர் விமானங்கள் தாங்கிய அமெரிக்காவின் விமானந்தாங்கிக் கப்பல் ஒன்று தென்சீனக் கடல் பகுதியில் நுழைந்தது. இது வழக்கமான சுற்றுக்காவல் நடவடிக்கை என்கிறது அமெரிக்காவின் 7வது படைப் பிரிவு.
இருப்பினும் நேன்சி பெலோசியின் தைவான் பயணம் குறித்த பேச்சுக்கு மத்தியில், இது பதற்றத்தை அதிகரித்துள்ளது.
அணுவாயுத ஆற்றல் கொண்ட யுஎஸ்எஸ் ரோனல்ட் ரீகன் என்ற அந்த கப்பல், ஐந்து நாள்கள் சிங்கப்பூரில் இருந்தது. ஜூலை 26ஆம் தேதி மீண்டும் தனது பயணத்தைத் தொடங்கிய அக்கப்பல், தென் சீனக் கடல் பகுதியில் நுழைந்தததாக படைப் பிரிவு சொன்னது.
"சுதந்திரமான, திறந்த இந்தோ-பசிபிக் வட்டாரத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், ரீகன் தனது வழக்கமான சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்தது," என்றார் அமெரிக்க அதிகாரி ஒருவர். இருப்பினும், அக்கப்பல் தொடர்ந்து எங்குச் செல்கிறது என்பது பற்றி பதிலளிக்க படைப் பிரிவு மறுத்துவிட்டது.
பெலோசி தைவானுக்குப் பயணம் மேற்கொண்டால், கடுமையான நடவடிக்கைகளை எடுக்க சீனா தயாராக உள்ளதாக வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கூறியிருந்தார்.
கடல், வான் பரப்பில் சீனா ரோந்துப் பணிகளை அதிகரிக்குமே தவிர, கடும் நடவடிக்கைகளை எடுப்பதற்கான வாய்ப்புக் குறைவு என்று இந்தோ-பசிபிக் வட்டார தற்காப்பு கொள்கை நிபுணரான பிளேக் ஹெர்ஸிங்கர் சொன்னார்.
சீனாவின் மிரட்டலைக் கண்டுகொள்ளாத தைவான் மக்கள்
அதேபோல், சீனாவின் இந்த எச்சரிக்கையை பெரும்பாலான தைவான் மக்களும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சீனாவின் மிரட்டல் தங்களுக்குப் பழக்கமாகிவிட்டது என்றும் பதற்றமடைய ஒன்றும் இல்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
"சீனாவின் மிரட்டல் வெறும் வாய்பேச்சுதான்," என்றார் 30 வயது கல்வித் துறை ஊழியரான சென் யென்-சென்.
"பெலோசியின் பயணம், தைவான் மீதான அமெரிக்காவின் கடப்பாட்டை வெளிப்படுத்துவதாக இருக்கும்," என்று தைவான் எதிர்க்கட்சியான கோமிங்டாங் கட்சியின் அனைத்துலக விவகாரங்களுக்கான இயக்குநர் அலெக்சாண்டர் ஹுவாங் கூறினார்.
இதற்கிடையே, தன்னுடன் பயணம் மேற்கொள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பெலோசி அழைப்பு விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

